கம்பெனி ஸ்கேன் - டிடிகே பிரெஸ்டீஜ் லிமிடெட்!

இந்த வாரம் நாம் ஸ்கேன் செய்யப்போகும் கம்பெனியின் தயாரிப்புகளில் ஏதாவது ஒன்று ஏறக்குறைய எல்லோருடைய வீட்டின் சமையலறையிலும் இருக்க வாய்ப்புள்ள ஒரு கம்பெனிதான். அந்த கம்பெனியின் பெயர், டிடிகே பிரெஸ்டீஜ் லிமிடெட்.  
தொழில் எப்படி?
வீட்டில் மிக முக்கியமான இடம் சமையலறை. சமையலறை சாதனங்கள் கட்டாயச் செலவாகக் கருதப்படுவதால் வியாபாரத்தின் அளவு என்பது தொடர்ந்து வளர்ச்சியைச் சந்திக்கவே வாய்ப்புள்ளது. இளைஞர்கள் நிறைந்த இந்தியா போன்ற நாட்டில் புதிய குடும்பங்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிக்கும் என்பதால் சமையலறை சாதனங்களுக்கான தேவையின் மொத்த வளர்ச்சியும் தொடர்ந்து அதிகரிக்கவே வாய்ப் புள்ளது. மேலும், வேகமாக வளர்ந்து வரும் பொருளாதாரச் சூழலும், அதிகரிக்கும் சம்பளங்களும் பல்வேறு புதுவிதமான சமையலறை உபகரணங்களின் தேவையை அதிகரிக்கும் என்பதில் சந்தேகமில்லை.
இவ்வளவு பாசிட்டிவான விஷயங் கள் இருந்தபோதிலும் சமையல் சாதனங்கள் துறையில் இருக்கும் ஒரு பெரிய சவால் என்பது சிறு மற்றும் குறு நிறுவனங்களின் தயாரிப்புகள் அளிக்கும் போட்டியாகும். சிறு மற்றும் குறு நிறுவனங்களுக்கு வரி மற்றும் அரசின் கட்டுப்பாடுகள் இல்லை.  விலை குறைவான பொருட்களும், சிறிய கடைகளிலும் பொருட்கள் கிடைக்கும் வண்ணம் விற்பனை உத்திகளைக் கொண்டிருப்பதும், இந்தத் துறையில் சிறு மற்றும் குறு நிறுவனங்களின் பங்கு 50 சதவிகிதத்துக்கும் அதிகம் என்பதும் கவனிக்க வேண்டிய விஷயம்.  
இருப்பினும் அதிகரிக்கும் சம்பளங் களும், உயரும் வாழ்க்கைத்தரமும் தரமான சமையலறை சாதனங்களை நோக்கி வாங்குவோரை நகர்த்துகின்றன. இந்தவகை எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்யவேண்டுமெனில், நல்லதொரு பிராண்ட் மதிப்பும் நீண்டகால அனுபவமும் இந்தத் துறையில் தேவைப் படுகிறது.
கம்பெனி எப்படி?
பிரெஸ்டீஜ் என்ற பிரஷர் குக்கர் பிராண்டின் பெயரை சரிவர உபயோகித்து விரிவாக்கம் செய்து பல்வேறுவிதமான சமையலறை சாதனங்களைத் தயாரித்து வெற்றிகரமாக விற்பனை செய்துவருகிறது இந்த நிறுவனம். பிரஷர் குக்கர் மற்றும் சமையல் உபகரணங்கள் பிரிவில் மிகவும் பழைமையான பிராண்டான பிரெஸ்டீஜ் தன்னுடைய சாதுரியமான திட்டமிடுதலால் இந்த இரண்டு செக்மென்ட்களையும் தாண்டி காஸ் ஸ்டவ்கள், இண்டக்ஷன் குக்கர்/ஸ்டவ், கிரைண்டர், மிக்ஸி, சமைத்த உணவைப் பாதுகாப்பாகவும், சுவை குறையாமலும் வைக்கத் தேவையான பாத்திரங்கள் போன்ற பல்வேறு சமையலறை சாதனங்களைத் தயாரித்து விற்பதில் முன்னணியில் இருக்கிறது.
வெறுமனே பிரஷர் குக்கர் விற்பனை மட்டுமே பெருமளவு லாபத்தைத் தந்துகொண்டிருந்த நிலையை மாற்றி தற்சமயம் மொத்த விற்பனையில் ஏறக்குறைய 50% மட்டுமே பிரஷர் குக்கர் மற்றும் சமையல் சாதனங்கள் பிரிவின் பங்களிப்பு உள்ளது. மீதமுள்ள விற்பனையில் காஸ் ஸ்டவ்கள் மற்றும் சமையலறையில் உதவும் மின்சாதனங்கள் பங்கெடுக்கிறது. தொழிலில் ஏற்படும் போட்டி மற்றும் சிறு மற்றும் குறு நிறுவனங்கள் ஏற்படுத்தக்கூடிய பாதிப்பை நன்குணர்ந்த இந்த நிறுவனம் அந்தப் பாதிப்பைத் தவிர்ப்பதற்கான சரியான நடவடிக்கைகளை எடுத்திருக்கிறது.  
நிர்வாகம் எப்படி?
நீண்டகாலமாக இந்தத் துறையில் இருப்பதாலும், நிறையப் பல புதிய வெற்றிகரமான தயாரிப்புகளை அறிமுகப்படுத்தியதும், ஒரு பிரஷர் குக்கர் கம்பெனி என்ற அடையாளத் திலிருந்து ஒரு முழுமையான  கிச்சன் கம்பெனி என்று ஏறக்குறைய பத்தாண்டு காலத்துக்குள் தன்னை மாற்றிக்கொண்டதிலிருந்தே இந்த நிறுவனத்தின் நிர்வாக குணாதிசயத்தை நம்மால் கணிக்க முடியும்.
ரிஸ்க்குகள் என்னென்ன?
எனினும், சிறு மற்றும் குறு நிறுவனங்களின் போட்டியும், போலிகளின் தாக்கமும் இந்த நிறுவனத்துக்கு ஒரு சவாலாகவே தொடர்ந்து இருந்துவருகிறது. இந்தச் சவால்களைச் சமாளிக்கத் தொடர்ந்து புதுப்புதுத் தயாரிப்புகளையும், ஏற்கெனவே இருக்கும் தயாரிப்புகளில் தொடர்ந்து புதுமைகளையும் செய்துவருகிறது இந்த நிறுவனம். போலிகளை எதிர்த்துப் போராடுவதில் இந்த நிறுவனம் செய்யும் பெரிய அளவிலான தனது தயாரிப்புகளும்,  விளம்பரங்களும், பிரெஸ்டீஜ் ஸ்மார்ட் கிச்சன் ஷோரூம்களும் பெரும்பங்கு வகிக்கின்றன எனலாம்.
பொருளாதாரம் வளமையாக இருக்கும்போது சற்றே விலையுயர்ந்த தயாரிப்புகளையும், வளமை குறையும்போது சாதாரண தயாரிப்பு களையும் வாங்குவது என்பது வாடிக்கையாளர்களின் பாணி. இந்தப் பிரச்னையும் இந்த நிறுவனத்தின் விற்பனையை ஓரளவு பாதிக்கலாம். இந்த நிறுவனத்தின் கடந்தகால வளர்ச்சியைப் பார்த்தோமானால், ஒருவேகம் தெரியும். இந்த வேகமே சிலசமயம் சில பிரச்னைகளைக் கொண்டுவந்துவிடக்கூடும். அதேபோல் அகில இந்திய ரீதியாகச் செயல்பட்ட போதிலும் தென்னிந்தியாவில் மிகப் பெரிய அளவிலான வெற்றியைப் பெற்றுள்ள பிராண்ட் இது. இதுவும் ஒருவகையிலான ரிஸ்க்தான்!
அரசாங்கம் சம்பந்தமான இடர்பாடுகள் பெரிய அளவில் இல்லாத தொழில் இது. விலை குறைந்த தயாரிப்புகள் தொடர்ந்து போட்டிபோட வாய்ப்பிருப்பதால் இதை ஒரு தொடர் ரிஸ்க்காகவே நாம் கருதவேண்டும். சந்தையினைப் பொறுத்தவரை, இந்த நிறுவனத்தின் பங்குகள் இதுபோன்ற நிறுவனங்களின் பங்குகளைவிட சற்று பிரீமியத்திலேயே விற்பனையாகிறது. எனவே, இதனையும் சற்று மனத்தில் நாம் கொள்ள வேண்டியுள்ளது.
எனினும், நீண்டகால அனுபவத்தையும், பிராண்டின் மதிப்பையும், இதுவரையிலான புதிய தயாரிப்புகளில் அடைந்த வெற்றியையும் மனத்தில்கொண்டால் இந்த நிறுவனத்தின் பங்குகளை முதலீட்டுக்காக ஆய்வு செய்வதில் தவறேதும் இல்லை எனலாம்.
ஏற்கெனவே குறிப்பிட்டபடி, இந்தப் பங்குகளின் விலை சற்றே பிரீமியத்தில் வியாபாரமாவதால் ஓர் அசாதாரண சூழலில் சந்தை வேகமாக இறங்கும்போது இந்தப் பங்குகளின் விலையும் இறங்கினால் முதலீட்டாளர்கள் இந்தப் பங்கில் சிறிதளவு முதலீடு செய்யலாம்.
- நாணயம் ஸ்கேனர்.
(குறிப்பு: இந்தப் பகுதி இன்றைய விலையிலேயே வாங்கவேண்டிய பங்கு பரிந்துரை பகுதி அல்ல. இதில் சொல்லப்பட்டுள்ள பங்குகளை வாங்குவது முதலீட்டாளர்களின் தனிப்பட்ட முடிவாகும்!)