மல்டி அசெட் ஃபண்ட் லாபம் தருமா?

ச.ஸ்ரீராம்
முதலீட்டுக்கான வாய்ப்பு என்று வரும்போது பங்குச் சந்தை, கடன் திட்டங்கள், தங்கம் என பல வரும். இவை அனைத்தையும் உள்ளடக்கிய முதலீடுதான் மல்டி அசெட் ஃபண்ட்கள்.  இந்த மல்டி அசெட் ஃபண்ட்கள் நல்ல லாபம் தருமா என்பது பற்றி நிதி ஆலோசகரும், ஃபார்ச்சூன் பிளானர் நிறுவனத்தின் இயக்குநருமான பி.பத்மநாபன் விளக்கிச் சொன்னார்.
'கடன் சார்ந்த திட்டங்கள், ஈக்விட்டி மியூச்சுவல் பண்ட், கோல்டு ஃபண்ட்களில் தனித் தனியாக முதலீடு செய்வதற்குப் பதிலாக, ஒரே ஃபண்டில் முதலீடு செய்யும்விதமாக வந்திருப்பது தான், மல்டி அசெட் ஃபண்ட்.
இதிலும் பலவகை இருக்கிறது. அதிகம் கடன், கொஞ்சம் ஈக்விட்டி திட்டம் என்பது  மன்த்லி இன்கம் பிளான் ஆகும். அதேசமயம், 65% ஈக்விட்டி மற்றும் 35% கடன் சார்ந்தவை பேலன்ஸ்டு திட்டங்களாகும். கடன் சார்ந்த திட்டத்துக்குப் பதில் தங்கத்தை வைத்து மன்த்லி இன்கம் பிளஸ் என்கிற திட்டத்தைக் கொண்டுவந்தார்கள். இந்த மூன்றையும் சரிசமமாகப் பங்கிட்டு அதற்கு 'ட்ரிபிள் அட்வான்டேஜ் திட்டம்’ என்று ஒரு திட்டத்தை பிற்பாடு கொண்டுவந்தார்கள். இந்த மல்டி அசெட் ஃபண்ட் திட்டங்கள் யாவும், ஈக்விட்டி தவிர வேறு ஒரு முதலீடு (உதாரணமாக, பங்குச் சந்தை இறக்கத்திலும், தங்கத்தின் விலை ஏற்றத்திலும் இருந்த காலத்தில்) லாபகரமாக இருந்தபோது ஆரம் பிக்கப்பட்டது.
இந்த  ஃபண்ட்களைத் தேர்வு செய்யும் போது, அதன் போர்ட்ஃபோலியோவின் பங்கு முதலீட்டில் பங்களிப்பு 65%க்கு மேல் இருக்கும்படி பார்த்துக்கொள்ள வேண்டும். அதாவது, மல்டி அசெட் ஃபண்டின் போர்ட்ஃபோலியோவில் 65%க்கு மேல் பங்குகளில் முதலீடு இருந்தால் வரிச் சலுகை இருக்கிறது. அதாவது, அது ஈக்விட்டி ஃபண்டாக இருக்க வேண்டும்.
ஈக்விட்டி திட்டத்தின் மிகப் பெரிய பலமே, ஒரு வருடத்துக்குப் பிறகு அதன் யூனிட்களை விற்கும்போது, வருமான வரி கிடையாது. அதேநேரத்தில் ஓராண்டுக்குள் விற்றால் குறுகிய கால மூலதன ஆதாய வரி 15% கட்டவேண்டி வரும்.
மல்டி அசெட் ஃபண்டில் இந்த மாதிரி காம்போ செய்யும்போது ஈக்விட்டி 65 சதவிகிதத்துக்கு கீழே இருந்தால் அதற்கு கடன் சார்ந்த திட்டத்தின் வரியாக (ஒரு வருடத்துக்குள்) அவரவர் அடிப்படை வருமான வரி விளிம்புக்கு ஏற்ப 10%, 20%, 30% வரி கட்டவேண்டி வரும். மேலும், ஒரு வருடத்துக்குப்பின் இண்டக்சேஷன் பெனிஃபிட் இல்லாமல் 10%, இண்டக்ஸ் பெனிஃபிட்டுடன் 20% வரி கட்ட வேண்டி வரும். இது அவர்களுடைய வரிக்குப் பிந்தைய வருமானத்தைப் பாதிக்கும்.
தங்கம் கடந்த 5 வருடம் தாறுமாறாக விலை ஏறியதால், எல்லாருக்கும் அதன்மேல் ஒரு ஈடுபாடு ஏற்பட்டது. தங்கமானது வருங்காலத்தில் குறைந்த அளவு வருமானம் அல்லது நெகட்டிவ் வருமானம் தரவே வாய்ப்புகள் அதிகம். அப்படி இருக்கும்போது இந்த காம்போக்களைத் தவிர்ப்பது நல்லது. இந்த காம்போக்களின் நோக்கமே இந்த ஃபண்டின் மீது முதலீட்டாலர்களுக்கு ஒரு கவர்ச்சியை உருவாக்கத்தான்.
கடந்த ஒரு வருடத்தில் சென்செக்ஸ் (2013, மே 30 வரை) ஏறக்குறைய 20% அதிகரித்திருக்கிறது. தங்கம் 14% விலை குறைந்திருக்கிறது. அரசாங்க பத்திரங்கள் (G-Sec) மதிப்பு 2% வரை உயர்ந்துள்ளது. இந்த ஓராண்டில் தங்கத்தின் பங்களிப்பு குறைவாக இருந்த மல்டி அசெட் ஃபண்ட்கள் 21% வருமானம் தந்திருக்கின்றன. இதன் போர்ட்ஃபோலியோவில் தங்கம் அதிகமாக உள்ள ஃபண்ட்கள் ஏறக்குறைய 3% வரை வருமானம் தந்திருக்கின்றன.
எந்த முதலீடு என்ன லாபம் தரும் என்று கண்டுகொள்வது கடினம். அப்படி இருக்கும்போது இந்த மாதிரி திட்டங்களைத் தவிர்ப்பது நல்லது.  அந்த வகையில் மல்டி அசெட் ஃபண்ட் சிறந்த திட்டமாக இருக்காது.
அதேசமயம், நாம் முதலீடு செய்த ஒன்றில் அதிக நஷ்டம் ஏற்படும்போது அதிக லாபம் தந்த திட்டங்களில் சேர்ந்திருக்கலாமோ என்று தோன்றும்.  நமது மொத்த முதலீட்டையும் சேர்த்து லாபமா, நஷ்டமா என்று பார்க்கும் போது தனித் தனியாக முதலீட்டுத் திட்டங்களைத் தேர்வு செய்வதே நல்ல பலனை தரும்.
இந்தத் திட்டத்தை விற்பவர்கள் நாங்கள் ஆட்டோமேட்டிக்காக பேலன்ஸ் செய்வோம் என்று சொல்கிறார்கள். ஒரு திட்டத்தில் லாபம் ஏற்படும்போது அந்த லாபத்தை எடுத்து மற்றொன்றுக்கு மாற்றுவார்கள். மேலும், இதை நாங்களே செய்வதற்கு பதிலாக, அல்காரிதம் என்கிற புரோக்ராமை 
பயன்படுத்துவதாகவும் சொல்கிறார்கள்.  இதில், இத்தனை சதவிகிதம் என்று ஒரு வரையறை வகுக்கும்போது சில சிக்கல்களை சந்திக்க வாய்ப்புள்ளது. அவ்வாறு வரையறை இல்லை எனில்  இந்தத் திட்டம் ஓரளவுக்குப் பயனுள்ளதாக இருக்கும்.

இந்த வகையைச் சேர்ந்த பேலன்ஸ்டு திட்டங்கள் சிறப்பாகச் செயல்பட்டு வருகின்றன. அவர்களே பேலன்ஸ் செய்வதால் நமக்கு டென்ஷன் கிடையாது. மற்றபடி மல்டி அசெட் ஃபண்ட்கள் பெரிதாக இதுவரை வெற்றி அடையவில்லை என்றே சொல்லலாம்.
இந்தத் திட்டத்துக்கு வருமான வரி, கடன் சார்ந்த திட்டங்களுக்கு உள்ளதுபோல் அதிக வரிச் செலுத்தவேண்டும். மேலும், இதை நிர்வகிப்பதற்கு ஆகும் செலவும் மற்ற ஃபண்ட்களைவிட கொஞ்சம் அதிகம்.
இந்தத் திட்டங்களில் ரிஸ்க் குறைவு என்று நினைப்பது தவறு. வருமான ரிஸ்க் அதிகம். இந்த மல்டி அசெட் ஃபண்ட் போர்ட்ஃபோலியோவில் பங்குகள், தங்கம் இருக்கிறது என்கிறபோது ஒன்று லாபம் தந்தால் மற்றொன்று இழப்பில் இருக்கும். அந்த வகையில், இதன் வருமானம் குறிப்பிட்ட சதவிகிதத்துக்குமேல் செல்லாது. அதாவது, ரிஸ்க் எடுப்பதற்கேற்ப வருமானம் கிடையாது. கடந்த 3 ஆண்டுகளில் 8.8% வருமானம் மட்டுமே தந்துள்ளது.
தங்கத்தில் முதலீடு செய்ய வேண்டும் என்பதற்காக இந்தத் திட்டத்தில் சேர வேன்டியதில்லை. ஒருவர் 5 வருடம் காத்திருக்க தயார் எனில், டைவர்சிஃபைட் மியூச்சுவல்  ஃபண்ட் திட்டத்தில் இணைந்து பயன் பெறலாம். மற்றபடி இந்தத் திட்டத்தில் முதலீடு செய்வதால் பெரிய பயன் ஏதும் இல்லை'' என்றார் பத்மநாபன்.
இந்தத் திட்டத்தில் முதலீடு செய்யும்முன் முதலீட்டாளர்கள் நன்கு யோசித்து முடிவெடுப்பது நல்லது!