கம்பெனி ஸ்கேன் : எஸ்கேஎஃப் இந்தியா லிமிடெட்!

சுவீடன் நாட்டில் 1907-ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு 1923-ம் ஆண்டு ஒரு டிரேடிங் நிறுவனமாக இந்தியாவில் கால்பதித்து 1961-ல் ஒரு லிமிடெட் மேனுபேக்ஸரிங் கம்பெனியாக உருவெடுத்த ஒரு நிறுவனத்தைத்தான் இந்த வார ஸ்கேனிங்குக்கு எடுத்துக் கொண்டுள்ளோம்.
எஸ்கேஎஃப் இந்தியா லிமிடெட் என்ற இந்த கம்பெனி 1965-ம் ஆண்டு தனது  முதல் தொழிற்சாலையைப் புனேயில் ஆரம்பித்தது. இன்று புனே, பெங்களூரு மற்றும் ஹரித்வாரில் உற்பத்தி செய்யும் வசதியையும், அகில இந்திய ரீதியாக 16 விற்பனை அலுவலகங்களையும், ஏறக்குறைய 1,500 டீலர்களையும், 300-க்கும் மேற்பட்ட டிஸ்ட்ரிப்யூட்டர்களையும் கொண்டு செயல்பட்டு வருகிறது இந்த நிறுவனம்.
பால் பேரிங் தயாரிப்போடு ஒரு முழுமையான சொல்யூஷன்களைத் தரும் கம்பெனியாகவும் இருக்கும் இந்த நிறுவனம்,  தனது வாடிக்கை யாளர்கள் தங்களைத் தொழிலில் நிலைநிறுத்திக்கொள்ளவும்; போட்டியில் வெற்றிபெறவும் உதவும் வகையில் நிறைய சேவைகளை வழங்கிவருவதால், வாடிக்கையாளர்கள் மத்தியில் நன்மதிப்பைப் பெற்றுள்ளது.
தொழிற்சாலைகள்!
புனேயில் உள்ள தொழிற்சாலையில் மோட்டார் வாகனம் மற்றும் தொழிற்சாலை மின்சாதனங்களுக்குத் தேவையான பேரிங்குகளையும், பெங்களூரில் உள்ள தொழிற்சாலையில் ஆட்டோமோட்டிவ் மற்றும் இண்டஸ்ட்ரியல் நிறுவனங்களுக்குத் தேவையான உபகரணங்களையும் தயாரிக்கிறது. 2010-ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட ஹரித்வார் தொழிற்சாலையில் இருசக்கர வாகனங்களுக்கான பால் பேரிங்கு களையும் தயாரித்து வருகிறது.
வாடிக்கையாளர்கள்!
மாருதி சுஸ¨கி, டாடா, டொயோட்டா, பியட், ஃபோர்டு, மஹிந்திரா, பாஸ்ச், ஹீரோ, பஜாஜ், ஹோண்டா, ஹீரோ, யமஹா, டி.வி.எஸ் போன்ற ஆட்டோமொபைல் நிறுவனங்களை வாடிக்கையாளராகக் கொண்டுள்ளது எஸ்கேஎஃப். இதுபோல, ஹெவி இண்டஸ்ட்ரீஸ், எனர்ஜி, இண்டஸ்ட்ரியல் மெஷினரி, ஆயில் மற்றும் காஸ், உணவு மற்றும் குளிர்பானம் ஆகிய துறைகளைச் சார்ந்த முன்னணி நிறுவனங்கள் அனைத்தையும் தனது வாடிக்கையாளராகக் கொண்டுள்ளது எஸ்கேஎஃப்.
இதனால் வியாபாரத்தின் வளர்ச்சிக்கு குறையேதுமில்லை எனலாம். ஆட்டோமொபைல் துறையில் நிலவும் போட்டியின் காரணமாக, தொடர்ந்து புதுப்புது மாடல்களை அறிமுகப்படுத்தி வருகிறது.  
புதிய முயற்சிகள்!
தனது தொழிற்சாலைகளில் இருக்கும் உற்பத்தி அனுபவத்தைக் கொண்டு தனது  வாடிக்கையாளர்களுக்குச் சிக்கலான சில உதிரிபாகங்களைத் தயாரிப்பதில் உதவி வருகிறது எஸ்கேஎஃப். டிராக்டர் நிறுவனங்களுக்கு ராக் மற்றும் பினியன் தயாரித்துத் தருவதும், கார் நிறுவனங்களுக்கு ஆக்சில் சீல் தயாரித்துத் தருவதும், ரயில்வே உபகரணங்கள் தயாரிக்கும் நிறுவனங் களுக்குச் சீலிங் சொல்யூஷன்களை வழங்கும் வேலையையும் சிறப்பாகச் செய்து வருகிறது இந்த நிறுவனம்.
தவிர,  பேப்பர் நிறுவனங்களுக்கு ஒட்டுமொத்த மெஷினரி மெயின்டனன்ஸ் செய்து கொடுப்பதும் எஸ்கேஎஃப் நிறுவனத்தின் உற்பத்தி அனுபவத்தை வியாபாரமாக்கும் முயற்சிகளில் சில எனலாம். இவை அனைத்துமே வாடிக்கை யாளரின் செலவைக்  குறைப்பதால் இந்தவகை வியாபாரம் தொடர்ந்து கிடைக்கும்.
நிர்வாகம் எப்படி?
சுவீடனின் எஸ்கேஎஃப், இந்திய நிறுவனத்தைக் கட்டுப்படுத்தும் அளவுக்கான பங்குகளைத் தன்வசத்தே வைத்துள்ளது. எஸ்கேஎஃப் என்ற உலகளாவிய பிராண்டின் தரம் வாடிக்கையாளர் மனத்தில் நன்றாகப் பதிந்துள்ளது வியாபாரத்துக்கு உதவுகிறது.
இந்த நிறுவனம் ஒரு பன்னாட்டு கம்பெனியின் அங்கம் என்பதால், இதுபோன்ற தொழில்களுக்குத் தொடர் தேவையான டெக்னாலஜி மற்றும் தொழில் ஆராய்ச்சிக்கு பஞ்சமே இல்லை எனலாம். நிர்வாகப் பொறுப்பில் இருக்கும் பல முக்கியஸ்தர்களும் இந்தத் துறையில் நல்ல அனுபவம் உள்ளவர்களாகவே இருப்பது ஒரு தனிச்சிறப்பு.
ஏன் முதலீடு செய்ய வேண்டும்?
இந்திய பொருளாதாரம் வளர்ச்சிப்பாதையில் மீண்டும் பயணிக்க ஆரம்பிக்கும்போது எஸ்கேஎஃப்-ன் தயாரிப்புகளுக்குப் பெருமளவில் தேவை உருவாகும். ஆட்டோமொபைல் துறை ஏறக்குறைய 45 சதவிகித விற்பனைப் பங்களிப்பைத் தருகிறது.
இந்தத் துறையிலும் தேய்மானத்துக்குப் பின்னால் வரும் மாறுதலுக்கான தேவையினால் வரும் விற்பனை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கலாம். இருசக்கர வாகனங்களின் பங்களிப்பு இந்தப் பிரிவில் அதிகம் இருப்பதால், தொடர்ந்து விற்பனை அதிகரிப்புக்கான வாய்ப்பிருக்கும் என்ற எதிர்பார்ப்பின் பேரில் முதலீடு செய்யலாம்.
ரிஸ்க் ஏதும் உண்டா?
எல்லா எம்என்சி நிறுவனங்களிலும் உள்ள ஒரு செலவினமான ராயல்டி இந்த நிறுவனத்திலும் உண்டு. விற்பனையில் மூன்று சதவிகிதத்தை ராயல்டியாகவும், இரண்டு சதவிகிதத்தை டிரேட் மார்க்குக்கான கட்டணமாகவும் எஸ்கேஎஃப் சுவீடனுக்குக் கொடுக்கிறது எஸ்கேஎஃப் இந்தியா. இந்த சதவிகிதங்கள் அதிகப்படுத்தப்பட்டால் லாபம் குறைய வாய்ப்புள்ளது.
சீனாவிலிருந்தும், ஜப்பானிலிருந்தும் வந்துள்ள நிறுவனங் களின் போட்டியால் எஸ்கேஎஃப்-ன் வியாபாரம் ஓரளவு பாதிப்படையலாம். பெருந்தொழில் நிறுவனங்களுக்கான ரிஸ்க்கான பொருளாதார மந்தநிலை என்பது தொடர்ந்தால் எஸ்கேஎஃப் பெரிய அளவில் வியாபார வளச்சியைக் காணாமல் போகலாம். மூலப்பொருட்களின் விலை மாறுதல்களும், கரன்சியின் விலை மாறுதல்களும் லாபத்தைக் கணிசமான அளவுக்குப் பாதிக்க வாய்ப்புள்ளது எனலாம்.
இதுபோன்ற ரிஸ்க்குகள் இருந்தாலும் நீண்ட தொழில் அனுபவமும், வலிமை மற்றும் வல்லமை பொருந்திய பிராண்டும், தான் ஈடுபட்டிருக்கும் எல்லாத் துறைகளிலும் முன்னோடியான டெக்னாலஜியை கைவசம் வைத்திருப்பதும், வேகமான வளர்ச்சி வரும்போது அதற்கான தேவையைப் பூர்த்திசெய்வதற்கான உற்பத்தித்திறனை கொண்டிருப்பதும் எஸ்கேஎஃப் நிறுவனத்தை முதலீட்டாளர்கள் முதலீட்டுக்குப் பரிசீலிக்க உகந்ததாகக்காட்டுகிறது.
சந்தை கொஞ்சம் நிதானிக்கும்போது இந்த நிறுவனத்தின் பங்குகளை 3 - 5 ஆண்டுகளுக்கான முதலீட்டுக்காக வாங்குவதற்கு டிராக் செய்யலாம்.
- நாணயம் ஸ்கேனர்
(குறிப்பு: இந்தப் பகுதி இன்றைய  விலையிலேயே வாங்க வேண்டிய பங்கு பரிந்துரை பகுதி அல்ல. இதில் சொல்லப்பட்டுள்ள பங்குகளை வாங்குவது முதலீட்டாளர்களின் தனிப்பட்ட முடிவாகும்!)