கம்பெனி ஸ்கேன் - ஜஸ்ட் டயல்!

இந்த வாரம் நாம் ஸ்கேன் செய்யப்போகும் கம்பெனி 'ஜஸ்ட்டயல் லிமிடெட்’ எனும் நிறுவனம்.
பொருட்களை விற்பவர்களையும், வாங்குபவர்களையும் குறைந்த செலவில் இணைக்கும் ஓர் இணைப்புப் பாலமாய் செயல்படும் நிறுவனம் இது. 'நாங்கள் இந்தியாவின் லோக்கல் சர்ச் இன்ஜின்’ என்று பெருமையுடன் சொல்லிக்கொள்ளும் இந்த நிறுவனம், '2013 நிதியாண்டில் 364 மில்லியன் முறை  எங்களை மக்கள் உபயோகப்படுத்தி உள்ளார்கள்’ என்ற புள்ளிவிவரத்தையும் தருகிறது. இந்தியாவில் உள்நாட்டு வர்த்தகம் குறித்த மிகப் பிரபலமான சர்ச் பிராண்டாக உருவெடுத்துள்ளது. ஏறக்குறைய 35 மில்லியன் உபயோகிப்பாளர்கள் உபயோகித்து அதன் சேவை குறித்து ரேட்டிங் செய்த நிறுவனம் இது.
புதிய தொழிலாக இருக்கிறதே; இந்தத் தொழில் நீண்ட நாட்களுக்கு சரியாகப் போகுமா; முதலீட்டுக்கு உகந்ததா என்ற கேள்வி முதலீட்டாளர் மனத்தில் எழலாம்.   1996-ல் ஆரம்பிக்கப்பட்ட இந்த நிறுவனம் 2007-ல் ஜஸ்ட்டயல் டாட்காம் என்ற வெப்சைட்டினை நிறுவியது.  ஏறக்குறைய 16 வருடங்களாக செயல்பட்டுவரும் தொழில் மற்றும் இந்த பிசினஸ் மாடல் தொடர்ந்து லாபம் ஈட்டியும் வருகிறது.
பர்சனல் கம்ப்யூட்டர்களின் உதவியுடன் இன்டர்நெட்டில் தேடுதல், மொபைல் போன்கள் மூலம் இன்டர்நெட்டில் தேடுதல், வாய்ஸ் மற்றும் எஸ்எம்எஸ் மூலம் தேடுதல் எனப் பல்வேறு தேடுதல் சேவைகளை வழங்கிவருகிறது இந்த நிறுவனம். ஜஸ்ட் டயல் நிறுவனத்தின் ஸ்மார்ட்போன் அப்ளிகேஷன் மிகவும் விசேஷமான சேவைகளான இன்டர்நெட்டின் மூலம் சாப்பாடு ஆர்டர் செய்தல், வொயின் ஆர்டர் செய்தல், ஹோட்டலில் டேபிள் புக் செய்தல், ஆன்லைன் ஷாப்பிங், டாக்டரிடம் அப்பாயின்மென்ட் பெறுதல், மருந்துக் கடைதனில் மருந்து வாங்குதல், மருத்துவ பரிசோதனை லேப்களில் அப்பாயின்மென்ட் போடுதல், பொக்கே ஆர்டர் செய்தல் எனப் பல்வேறு கூடுதல் சேவைகளைத் தருவதாக இருக்கிறது.  
2013-ம் நிதியாண்டில் தேடுதலுக்காக ஜஸ்ட்டயல் உபயோகப்பட்டதைவிட 2014-ல் முடிந்த நிதியாண்டில் ஏறக்குறைய 38% அதிகரித்துள்ளது. இதில் இன்டர்நெட் மூலம் வரும் தேடுதல்கள் கிட்டத்தட்ட 24 சதவிகித வளர்ச்சியையும், மொபைல் இன்டர்நெட் மூலம் வரும் தேடுதல்கள் கிட்டத்தட்ட 126 சதவிகித வளர்ச்சியையும், வாய்ஸ் மூலம் வரும் தேடுதல்கள் கிட்டத்தட்ட 5 சதவிகித வளர்ச்சியையும் கொண்டிருந்தது.
இதில் வாய்ஸ் மூலம் வரும் தேடுதல் குறைவது ஒரு நல்ல டிரெண்ட் என்றே சொல்லலாம். ஏனென்றால், வாய்ஸ் மூலம் வரும் தேடுதலுக்கு பணியாளர்கள் வேலைக்கு வைக்கப்பட்டு அவர்களே பதில் சொல்லவேண்டும். இந்த வகைத் தேடுதல் அதிகரித்தால் சம்பளச் செலவு ஜஸ்ட்டயலுக்கு அதிகமாகும். 2013-ல் முடிவடைந்த நிதியாண்டில் இன்டர்நெட் மற்றும் மொபைல் இன்டர்நெட் தேடுதல்களின் அளவு மொத்த தேடுதல்களில் 84 சத விகிதமாகவும், 2014-ல் அதுவே 88 சத விகிதமாகவும் இருந்தது.
ஜஸ்ட்டயல் வெறும் தேடுதலுக்கான ஒரு நிறுவனம் மட்டுமல்ல. தன்னுடைய சர்வர்களில் பொருட்கள் மற்றும் சர்வீஸ் தருபவர்களின் பட்டியலையும் வைத்துள்ளது.  இந்தப் பட்டியலின் அளவு சென்ற நிதியாண்டைவிட இந்த நிதியாண்டில் ஏறக்குறைய 30 சதவிகித வளர்ச்சியை அடைந்துள்ளது. இதில் பணம் செலுத்தி பட்டியலிட்டவர்களின் எண்ணிக்கை 2013-ம் நிதியாண்டில் 2,06,500 ஆகவும், 2014-ம் நிதியாண்டில் 2,62,150 ஆகவும் இருந்தது. இந்த லிஸ்ட்டிங்கில் பிரீமியம் லிஸ்ட்டிங் என்ற வசதியை அனுபவித் தால் விளம்பரம் செய்பவர்கள் சற்று அதிகத் தொகையை செலுத்த வேண்டியிருக்கும்.  மொத்த பட்டியலில் கிட்டத்தட்ட 23 சதவிகிதம் பிரீமியம் லிஸ்ட்டிங்காக உள்ளது. இந்த பிரீமியம் லிஸ்ட்டிங்கிலிருந்து கிடைக்கும் வருமானம் மொத்த வருமானத்தில் கிட்டத்தட்ட 45 சதவிகித வருமானமாக இருக்கிறது.
வெறும் தேடுதல் (சர்ச்) சேவையில் தொடர்ந்து லாபம் வருமா?, அப்படியே வந்தாலும் அது கணிசமானதாக இருக்குமா என்ற எண்ணம் முதலீட்டாளர்கள் மனத்தில் தோன்றலாம்.
சர்ச் வசதியைத் தாண்டி 'சர்ச் பிளஸ்’ என்ற வசதியை ஜஸ்ட்டயல் தந்துவருகிறது. இதுதவிர, ரியல் டைம் ரிவர்ஸ் ஏலம் என்ற முறையில் பிராண்டட் பொருட்களை விற்பனை செய்கிறது. இந்த முறையில் ஜஸ்ட்டயலுக்கு வரும் தேடுதல் கோரிக்கையை ஏழு நிறுவனங்களுக்கு அனுப்புகிறது ஜஸ்ட்டயல். அந்த ஏழில் யார் குறைந்த விலைக்கு பொருளை விற்பனை செய்கிறார்களோ, அவர்களுடன் ஜஸ்ட்டயலில் தேடுதல் செய்தவர் வியாபாரம் செய்துகொள்வார்.
ஜஸ்ட்டயல் முதல் நிலையாக இந்த ஏழு நிறுவனங்களிடம் இருந்தும் ஒரு சிறுதொகையை கமிஷனாகப் பெறும். ஜஸ்ட் டயலுக்கு வரும் தேடுதலை இந்த நிறுவனங்களுக்கு அனுப்புவதற்கு மட்டுமே இந்த கமிஷன் தொகை. வியாபாரம் நடக்கிறதா, இல்லையா என்று பார்ப்பதில்லை. ஜஸ்ட்டயல் ஏறக்குறைய ஒரு நாளைக்கு 2,000 டீல்களை இந்தவகையில் நடத்துகிறது. சர்ச் பிளஸில் 2013-ம் ஆண்டின் இறுதியில் இருந்த 85,000 வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை 2014-ம் நிதியாண் டின் இறுதியில் கிட்டத்தட்ட 1,40,000-ஆக உயர்ந்துள்ளது.
ஏன் முதலீடு செய்ய வேண்டும்?
ஒரு நூதனமான தொழில் இது. முதலில் முனைபவருக்கும் நல்லதொரு பிராண்டை உருவாக்கிக்கொண்ட நிறுவனங்கள் மட்டுமே இந்தத் தொழிலில் நிலைத்து நிற்க முடியும். அதிகரித்துவரும் பணம் செலுத்தி  பிரீமியம் சர்வீஸை உபயோகிக்கும் வாடிக்கையாளர்கள் இந்த சர்வீஸ் உபயோகமாயிருக்கிறது என்பதற்கு சான்றளிக்கிறது. இன்டர்நெட் மற்றும் மொபைல் இன்டர்நெட்டின் மூலம் வரும் வருவாய் அதிகரித்துக் கொண்டே போவதால் (தொழிலாளர்கள் எண்ணிக்கை குறைவதால்) லாபம் நன்றாக அதிகரிக்கும் வாய்ப்புள்ளது.
ரிஸ்க்குகள் ஏதும் உண்டா?
கம்பெனியின் செயல்பாடு முழுக்க முழுக்க டெக்னாலஜியை நம்பியதாக உள்ளது முதல் ரிஸ்க்காகும். மிகச் சுலபமாக கூகுள் போன்ற நிறுவனங்கள் இந்தத் தொழிலுக்குப் போட்டியாக வந்துவிடும் வாய்ப்பு இருக் கிறது. பொருட்கள் மற்றும் சர்வீஸ் களில் டீல் பண்ணுவதால் சட்டச் சிக்கல்களுக்கும் பஞ்சமிருக்காது.
டெக்னாலஜி மற்றும் இன்டர்நெட்டில் லாபம் பார்க்கும் வகையில் தொழில் நடத்துவது சமீபகாலமாக சற்று சுலபமாகவே இருக்கிறது. எனவே, முதலீட்டாளர்கள், இந்தவகை நிறுவனங்களில் சிறிய அளவில் முதலீடு செய்ய முயற்சிக்கலாம். இன்றைய விலையில் வாங்காமல் ஒரு அசாதாரண நிலையில் விலை இறங்கும்போது மிகவும் குறைந்த எண்ணிக்கையில் இந்தப் பங்குகளை மத்திம (2-4 வருடங்கள்) கால முதலீட்டுக்காக வாங்கிப்பார்க்கலாம்.
- நாணயம் ஸ்கேனர்.
(குறிப்பு: இந்த விலையிலேயே வாங்க வேண்டிய பங்கு பரிந்துரை பகுதி அல்ல. இதில் சொல்லப்பட்டுள்ள பங்குகளை வாங்குவது முதலீட்டாளர்களின் தனிப்பட்ட முடிவாகும்!)