கம்பெனி ஸ்கேன் : சோமனி செராமிக்ஸ் லிமிடெட்!

இந்த வாரம் நாம் ஸ்கேன் செய்யப்போகும் கம்பெனி 1968-ம் ஆண்டு, இங்கிலாந்தைச் சார்ந்த பில்கிங்டன்ஸ் டைல்ஸ் என்ற நிறுவனத்துடன் கூட்டுசேர்ந்து ஆரம்பிக்கப்பட்ட சோமனி செராமிக்ஸ் லிமிடெட் எனும் நிறுவனத்தைத்தான்.
கட்டடக்கலையில் பெரும் பங்களிக்கும் இந்த நிறுவனத்தின் தயாரிப்புகள் அத்தியாவசியம் என்ற நிலைமைக்கு ஏறக்குறைய வந்துவிட்டது. வீடோ, அலுவலகமோ தளத்துக்கு செராமிக் டைல்ஸ் என்கிற நிலைமை உருவாகிவிட்டநிலையில், வியாபாரத்துக்குத் தட்டுப்பாடு இல்லாத சூழலே இந்த கம்பெனியின் தொழிலில் நிலவுகிறது.
தொழில் எப்படி?
இந்திய செராமிக் டைல்ஸ் தொழில் ஏறக்குறைய 200 பில்லியன் ரூபாய் வியாபார அளவீட்டை (600 மில்லியன் சதுர மீட்டர் அளவு) கொண்டதாகத் தற்சமயம் இருக்கிறது. இவ்வளவு பெரிய வியாபாரமாக இருந்தாலும் தனிநபர் உபயோகம் (பெர் கேப்பிட்டா கன்ஸம்ப்ஷன்) என்பது இந்தியாவைப் பொறுத்தவரை, மிகக் குறைவாக 0.4 சதுர மீட்டர் என்ற அளவிலேயே இருக்கிறது. ஒரு ஒப்பீட்டுக்காகப் பார்த்தால், இந்த அளவு சீனாவில் 2.6 சதுர மீட்டராகவும், பிரேசிலில் 3.6 சதுர மீட்டராகவும், வியட்நாமில் 3.8 சதுர மீட்டராகவும் இருக்கிறது.
இந்தத் தொழிலில் பெரிய தொழிற்சாலைகளும் (பிராண்டுகளுடன் கூடிய), சிறிய தொழிற்சாலைகளும் (பிராண்ட்கள் அல்லாத) சரிசமமான அளவில் போட்டிபோடுகின்றன. இந்தச் சிறிய அன்-ஆர்கனைஸ்டு தொழிற்சாலைகளில் பெரும்பான்மை யானவை குஜராத்தில் உள்ள மோர்பி என்ற இடத்திலேயே உள்ளன. பிராண்டட் செராமிக் டைல்ஸ் விற்பனையில் டாப் எட்டு நிறுவனங்கள் ஏறக்குறைய 85 சதவிகித சந்தைப் பங்களிப்பை தன்வசத்தே வைத்துள்ளன.
கடந்த ஐந்து ஆண்டுகளில் இந்திய செராமிக் டைல்ஸ் துறை ஏறக்குறைய  14 சதவிகித (சிஏஜிஆர்) அளவீட்டில் வளர்ந்தது. செராமிக் டைல்ஸ் துறையின் உலக அளவிலான சராசரி வளர்ச்சி விகிதத்தைவிட, இது இரண்டு மடங்கு வேகமான வளர்ச்சி என்கிறது புள்ளிவிவரங்கள்.
இந்த வளர்ச்சிக்கு முக்கியக் காரணமாக, வாங்கும் தகுதி கூடுதல், இரண்டாம் நிலை மற்றும் மூன்றாம் நிலை நகரங்களின் வேகமான வளர்ச்சி, மார்பிளுக்குச் சிறந்த ஒரு மாற்றாக செராமிக் டைல்ஸ் கருதப்படுவது மற்றும் ஆர்கனைஸ்டு கட்டுமானத் துறையில் வீடு மற்றும் கமர்ஷியல் கட்டடங்கள் கட்டுவதில் அடைந்துவரும் வேகமான வளர்ச்சி போன்றவையே எனக் கூறப்படுகிறது.
செராமிக் டைல்ஸ் உபயோகத்தில், வீடுகள் கட்டுமானம் ஏறக்குறைய 65 சதவிகித பங்களிப்பை அளிக்கிறது. வீடுகள் கட்டுமானத்தில் செராமிக் டைல்ஸ் உபயோகத்தின் அளவு கடந்த ஐந்து வருடங்களில் இரண்டு இலக்க அளவீட்டில் வளர்ச்சி பெற்று வருகிறது.
கம்பெனி எப்படி?
சோமனி செராமிக்ஸ் நிறுவனம் விற்பனை அளவீட்டில் இந்தியாவின் இரண்டாவது பெரிய செராமிக் டைல்ஸ் நிறுவனமாகும். இந்த நிறுவனமும் கடந்த 5 வருடங்களில் ஏறக்குறைய 14-15 சதவிகித அளவிலான (சிஏஜிஆர்) விற்பனை வளர்ச்சியை எட்டிப்பிடித்து வருகிறது. வேகமாகத் தனது  பிராண்டை வளர்த்துவரும் சோமனி செராமிக்ஸ் விற்பனைக்கு ஈடாக உற்பத்தித்திறன் அளவிலும் வளர்ச்சியை உருவாக்கிக் கொண்டிருக்கிறது. பெரும்பாலும், இந்த உற்பத்தித்திறன் கூட்டு முதலீடுகளின் (ஜேவி) மூலமே செயலாக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது.
2005-11ம் ஆண்டு காலகட்டத்தில் அவுட்சோர்ஸிங் என்ற கொள்கையில் செயல்பட்டுவந்ததால் பெரிய அளவிலான உற்பத்தித்திறன் அதிகரிப்பை சோமனி செராமிக்ஸ் ஏற்படுத்திக்கொள்ளவில்லை என்ற போதிலும், 2012-ம் ஆண்டு முதல் பெரும் முயற்சிகளைச் செய்து ஏறக்குறைய தனது உற்பத்தித்திறனை இரண்டு மடங்காக உயர்த்தியுள்ளது. உற்பத்தித்திறன் அதிகரிப்பை கூட்டு முதலீட்டுத் (ஜேவி) திட்டங்கள் மூலமே பெருமளவில் செயல்படுத்தி வருகிறது சோமனி செராமிக்ஸ்.
தற்சமயம் ஏறக்குறைய அகில இந்திய ரீதியாக 1,700 டீலர்களை வைத்திருக்கும் சோமனி செராமிக்ஸ் இந்த நிதியாண்டின் இறுதியில் மேலும் 75 டீலர்களைச் சேர்க்க திட்டங்களை வைத்துள்ளது. புதிய டீலர் நெட்வொர்க்கை இரண்டாம் நிலை மற்றும் மூன்றாம் நிலை நகரங்களில் உருவாக்குவதன் மூலம், வேகமாக வளர்ந்துவரும் இந்த நகரங்களில் விற்பனையை அதிகரிக்கலாம் என்ற எண்ணத்துடன் செயலாக்கி வருகிறது சோமனி செராமிக்ஸ்.
சோமனி செராமிக்ஸின் மொத்த விற்பனை வடஇந்தியாவில் ஏறக்குறைய 36 சதவிகிதமும், தென் இந்தியாவில் 33 சதவிகிதமும், மேற்கு இந்தியாவில் 13 சதவிகிதமும், கிழக்கு இந்தியாவில் 15 சதவிகிதமும், எஞ்சிய இடங்களில் 3 சதவிகிதமும் பங்களிப்பைத் தருகிறது.
தற்சமயம், செராமிக் கிளேஸ்ட் டைல்ஸை மூன்று தொழிற்சாலை களிலும், பாலிஷ்டு விட்ரிஃபைட் டைல்ஸ் களை மூன்று தொழிற்சாலைகளிலும், கிளேஸ்ட் விட்ரிஃபைட் டைல்ஸை ஒரு தொழிற்சாலையிலும் உற்பத்தி செய்துவருகிறது. ஏறக்குறைய ஐம்பது வருடங்களாக செராமிக் டைல்ஸ் துறையில் இருந்துவருகிறபோதிலும் சோமனி செராமிக்ஸ் பிரீமியம் டைல்ஸ் விற்பனையில் பெரும் பங்கு வகிப்பது இல்லை என்பது ஒரு சிறிய குறைதான். இதனை உணர்ந்த சோமனி செராமிக்ஸ் நிறுவனம்,  டிவி, பத்திரிகை, சோஷியல் மீடியா என பல ஊடகங்கள் மூலமாகத் தனது பிராண்டை வளர்க்க கடினமான முயற்சிகளைத் தற்போது எடுத்து வருகிறது.
போட்டி எப்படி?
அன்ஆர்கனைஸ்டு செக்டார் எனப்படும் சிறு மற்றும் குறுந் தொழில்கள் ஏறக்குறைய 50 சதவிகித விற்பனையைச் செய்து கடும் போட்டியைத் தருகின்றன. மீதமிருக்கும் சந்தை அளவில் ஏறக்குறைய 12 நிறுவனங்கள் தங்கள் பங்களிப்பைத் தருகின்றன. ஹெச் அண்ட் ஆர் ஜான்ஸன், கஜாரியா, சோமனி, நிட்கோ, ஏசியன் கிரானிட்டோ, ராக், ஓரியன்ட் பெல், வர்மோரா, ரீஜென்சி, பெல்கிரானிட்டோ, முர்தேஷ்வர், யூரோ போன்ற பெரிய நிறுவனங்கள் இந்தத் துறையில் கோலோச்சுகின்றன.
சோமனி செராமிக்ஸ் இந்த நிறுவனங்களிடையே விற்பனை அளவீட்டில் மூன்றாவது இடத்தைத் தக்கவைத்துக் கொண்டிருக்கிறது. இது தவிர, இறக்குமதி செய்யப்படும் செராமிக் டைல்ஸ்களும் சந்தையில் போட்டியாக விற்பனை செய்யப்படுகிறது.
பொருளாதார வளர்ச்சி அதிகமாகும் போது வீடுகளுக்கான தேவையும் அதிகரிக்கும். அந்தச் சூழலில் இந்த அனைத்து நிறுவனங்களுமே விற்பனையை அதிகரிக்கப் பாடுபடும். ஏற்கெனவே தங்களுடைய பிராண்டின் மதிப்பைக் கூட்டிக்கொள்ளவும், புதிய உற்பத்தித்திறனை உருவாக்கிக் கொள்ளவும் அனைத்து நிறுவனங் களுமே தயாராகி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
ரிஸ்க் ஏதும் உண்டா?
பொருளாதாரச் சுணக்கம் தீர்ந்து வளர்ச்சிப் பாதையில் நாடு பயணிக்க ஆரம்பித்தால் நிறைய லாபம் பார்க்கும் வாய்ப்பு இந்த நிறுவனத்துக்கு  உண்டு எனலாம். பொருளாதாரச் சுணக்கம் தீர்வதற்கு கொஞ்ச நாட்கள் பிடித்தால் அதுவரையிலும் விற்பனை வளர்ச்சியிலும் சற்று சுணக்கம் ஏற்படலாம்.
பிரீமியம் பிராண்ட் ஆவதற்கான முயற்சிகளை எடுக்கும்போது நிறைய விளம்பரச் செலவினங்கள் வரும். இந்தச் செலவினங்கள் வரும்போது வருவாயும் கணிசமாக உயருவதற்கான விற்பனைச் சூழல் நிலவினாலே முதலீட்டாளர்கள் லாபம் பார்க்க முடியும்.
இந்தத் துறையில் நீண்ட அனுபவம் கொண்ட மேனேஜ்மென்ட் என்பதால் பெரிய பாதிப்பை ஏற்படுத்தாமல் பார்த்துக்கொள்ளும் பக்குவம் இருக்கிறது என்ற போதிலும் சிறிய அளவில் இந்த ரிஸ்க் இருப்பதை மறுப்பதற்கில்லை.
ஏன் முதலீட்டுக்கு பரிசீலிக்கலாம்?
வீடு என்பது ஒவ்வொரு மனிதனின் கனவு. அந்தக் கனவை நனவாக்க முயலுகையில் செராமிக் டைல்ஸ் மிகவும் அத்தியாவசியமானதாக உள்ளது.
நீண்ட நாட்கள் இந்தத் துறையில் இருப்பதாலும், விற்பனை அளவில் போட்டியாளர்கள் மத்தியில் இரண்டாம் நிலையில் இருப்பதாலும் இந்த நிறுவனம் வளர்ச்சிப் பாதையில் பயணிக்க வாய்ப்பு சற்று அதிகமாக இருப்பதுபோலவே தோன்றுகிறது. இதனாலேயே சந்தை ஓர் அசாதாரணச் சூழலில் இறங்கும்போது இந்தக் கம்பெனியின் பங்குகளில் முதலீடு செய்வதற்காக முதலீட்டாளர்கள் டிராக் செய்வதில் தவறேதும் இல்லை எனலாம்.
- நாணயம் ஸ்கேனர்.
(குறிப்பு: இந்தப் பகுதி இன்றைய  விலையிலேயே வாங்க வேண்டிய பங்கு பரிந்துரை பகுதி அல்ல. இதில் சொல்லப்பட்டுள்ள பங்குகளை வாங்குவது முதலீட்டாளர்களின் தனிப்பட்ட முடிவாகும்!)