கம்பெனி ஸ்கேன் : எஸ்கேஎஃப் இந்தியா லிமிடெட்!

சுவீடன் நாட்டில் 1907-ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு 1923-ம் ஆண்டு ஒரு டிரேடிங் நிறுவனமாக இந்தியாவில் கால்பதித்து 1961-ல் ஒரு லிமிடெட் மேனுபேக்ஸரிங் கம்பெனியாக உருவெடுத்த ஒரு நிறுவனத்தைத்தான் இந்த வார ஸ்கேனிங்குக்கு எடுத்துக் கொண்டுள்ளோம்.
எஸ்கேஎஃப் இந்தியா லிமிடெட் என்ற இந்த கம்பெனி 1965-ம் ஆண்டு தனது  முதல் தொழிற்சாலையைப் புனேயில் ஆரம்பித்தது. இன்று புனே, பெங்களூரு மற்றும் ஹரித்வாரில் உற்பத்தி செய்யும் வசதியையும், அகில இந்திய ரீதியாக 16 விற்பனை அலுவலகங்களையும், ஏறக்குறைய 1,500 டீலர்களையும், 300-க்கும் மேற்பட்ட டிஸ்ட்ரிப்யூட்டர்களையும் கொண்டு செயல்பட்டு வருகிறது இந்த நிறுவனம்.
பால் பேரிங் தயாரிப்போடு ஒரு முழுமையான சொல்யூஷன்களைத் தரும் கம்பெனியாகவும் இருக்கும் இந்த நிறுவனம்,  தனது வாடிக்கை யாளர்கள் தங்களைத் தொழிலில் நிலைநிறுத்திக்கொள்ளவும்; போட்டியில் வெற்றிபெறவும் உதவும் வகையில் நிறைய சேவைகளை வழங்கிவருவதால், வாடிக்கையாளர்கள் மத்தியில் நன்மதிப்பைப் பெற்றுள்ளது.
தொழிற்சாலைகள்!
புனேயில் உள்ள தொழிற்சாலையில் மோட்டார் வாகனம் மற்றும் தொழிற்சாலை மின்சாதனங்களுக்குத் தேவையான பேரிங்குகளையும், பெங்களூரில் உள்ள தொழிற்சாலையில் ஆட்டோமோட்டிவ் மற்றும் இண்டஸ்ட்ரியல் நிறுவனங்களுக்குத் தேவையான உபகரணங்களையும் தயாரிக்கிறது. 2010-ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட ஹரித்வார் தொழிற்சாலையில் இருசக்கர வாகனங்களுக்கான பால் பேரிங்கு களையும் தயாரித்து வருகிறது.
வாடிக்கையாளர்கள்!
மாருதி சுஸ¨கி, டாடா, டொயோட்டா, பியட், ஃபோர்டு, மஹிந்திரா, பாஸ்ச், ஹீரோ, பஜாஜ், ஹோண்டா, ஹீரோ, யமஹா, டி.வி.எஸ் போன்ற ஆட்டோமொபைல் நிறுவனங்களை வாடிக்கையாளராகக் கொண்டுள்ளது எஸ்கேஎஃப். இதுபோல, ஹெவி இண்டஸ்ட்ரீஸ், எனர்ஜி, இண்டஸ்ட்ரியல் மெஷினரி, ஆயில் மற்றும் காஸ், உணவு மற்றும் குளிர்பானம் ஆகிய துறைகளைச் சார்ந்த முன்னணி நிறுவனங்கள் அனைத்தையும் தனது வாடிக்கையாளராகக் கொண்டுள்ளது எஸ்கேஎஃப்.
இதனால் வியாபாரத்தின் வளர்ச்சிக்கு குறையேதுமில்லை எனலாம். ஆட்டோமொபைல் துறையில் நிலவும் போட்டியின் காரணமாக, தொடர்ந்து புதுப்புது மாடல்களை அறிமுகப்படுத்தி வருகிறது.  
புதிய முயற்சிகள்!
தனது தொழிற்சாலைகளில் இருக்கும் உற்பத்தி அனுபவத்தைக் கொண்டு தனது  வாடிக்கையாளர்களுக்குச் சிக்கலான சில உதிரிபாகங்களைத் தயாரிப்பதில் உதவி வருகிறது எஸ்கேஎஃப். டிராக்டர் நிறுவனங்களுக்கு ராக் மற்றும் பினியன் தயாரித்துத் தருவதும், கார் நிறுவனங்களுக்கு ஆக்சில் சீல் தயாரித்துத் தருவதும், ரயில்வே உபகரணங்கள் தயாரிக்கும் நிறுவனங் களுக்குச் சீலிங் சொல்யூஷன்களை வழங்கும் வேலையையும் சிறப்பாகச் செய்து வருகிறது இந்த நிறுவனம்.
தவிர,  பேப்பர் நிறுவனங்களுக்கு ஒட்டுமொத்த மெஷினரி மெயின்டனன்ஸ் செய்து கொடுப்பதும் எஸ்கேஎஃப் நிறுவனத்தின் உற்பத்தி அனுபவத்தை வியாபாரமாக்கும் முயற்சிகளில் சில எனலாம். இவை அனைத்துமே வாடிக்கை யாளரின் செலவைக்  குறைப்பதால் இந்தவகை வியாபாரம் தொடர்ந்து கிடைக்கும்.
நிர்வாகம் எப்படி?
சுவீடனின் எஸ்கேஎஃப், இந்திய நிறுவனத்தைக் கட்டுப்படுத்தும் அளவுக்கான பங்குகளைத் தன்வசத்தே வைத்துள்ளது. எஸ்கேஎஃப் என்ற உலகளாவிய பிராண்டின் தரம் வாடிக்கையாளர் மனத்தில் நன்றாகப் பதிந்துள்ளது வியாபாரத்துக்கு உதவுகிறது.
இந்த நிறுவனம் ஒரு பன்னாட்டு கம்பெனியின் அங்கம் என்பதால், இதுபோன்ற தொழில்களுக்குத் தொடர் தேவையான டெக்னாலஜி மற்றும் தொழில் ஆராய்ச்சிக்கு பஞ்சமே இல்லை எனலாம். நிர்வாகப் பொறுப்பில் இருக்கும் பல முக்கியஸ்தர்களும் இந்தத் துறையில் நல்ல அனுபவம் உள்ளவர்களாகவே இருப்பது ஒரு தனிச்சிறப்பு.
ஏன் முதலீடு செய்ய வேண்டும்?
இந்திய பொருளாதாரம் வளர்ச்சிப்பாதையில் மீண்டும் பயணிக்க ஆரம்பிக்கும்போது எஸ்கேஎஃப்-ன் தயாரிப்புகளுக்குப் பெருமளவில் தேவை உருவாகும். ஆட்டோமொபைல் துறை ஏறக்குறைய 45 சதவிகித விற்பனைப் பங்களிப்பைத் தருகிறது.
இந்தத் துறையிலும் தேய்மானத்துக்குப் பின்னால் வரும் மாறுதலுக்கான தேவையினால் வரும் விற்பனை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கலாம். இருசக்கர வாகனங்களின் பங்களிப்பு இந்தப் பிரிவில் அதிகம் இருப்பதால், தொடர்ந்து விற்பனை அதிகரிப்புக்கான வாய்ப்பிருக்கும் என்ற எதிர்பார்ப்பின் பேரில் முதலீடு செய்யலாம்.
ரிஸ்க் ஏதும் உண்டா?
எல்லா எம்என்சி நிறுவனங்களிலும் உள்ள ஒரு செலவினமான ராயல்டி இந்த நிறுவனத்திலும் உண்டு. விற்பனையில் மூன்று சதவிகிதத்தை ராயல்டியாகவும், இரண்டு சதவிகிதத்தை டிரேட் மார்க்குக்கான கட்டணமாகவும் எஸ்கேஎஃப் சுவீடனுக்குக் கொடுக்கிறது எஸ்கேஎஃப் இந்தியா. இந்த சதவிகிதங்கள் அதிகப்படுத்தப்பட்டால் லாபம் குறைய வாய்ப்புள்ளது.
சீனாவிலிருந்தும், ஜப்பானிலிருந்தும் வந்துள்ள நிறுவனங் களின் போட்டியால் எஸ்கேஎஃப்-ன் வியாபாரம் ஓரளவு பாதிப்படையலாம். பெருந்தொழில் நிறுவனங்களுக்கான ரிஸ்க்கான பொருளாதார மந்தநிலை என்பது தொடர்ந்தால் எஸ்கேஎஃப் பெரிய அளவில் வியாபார வளச்சியைக் காணாமல் போகலாம். மூலப்பொருட்களின் விலை மாறுதல்களும், கரன்சியின் விலை மாறுதல்களும் லாபத்தைக் கணிசமான அளவுக்குப் பாதிக்க வாய்ப்புள்ளது எனலாம்.
இதுபோன்ற ரிஸ்க்குகள் இருந்தாலும் நீண்ட தொழில் அனுபவமும், வலிமை மற்றும் வல்லமை பொருந்திய பிராண்டும், தான் ஈடுபட்டிருக்கும் எல்லாத் துறைகளிலும் முன்னோடியான டெக்னாலஜியை கைவசம் வைத்திருப்பதும், வேகமான வளர்ச்சி வரும்போது அதற்கான தேவையைப் பூர்த்திசெய்வதற்கான உற்பத்தித்திறனை கொண்டிருப்பதும் எஸ்கேஎஃப் நிறுவனத்தை முதலீட்டாளர்கள் முதலீட்டுக்குப் பரிசீலிக்க உகந்ததாகக்காட்டுகிறது.
சந்தை கொஞ்சம் நிதானிக்கும்போது இந்த நிறுவனத்தின் பங்குகளை 3 - 5 ஆண்டுகளுக்கான முதலீட்டுக்காக வாங்குவதற்கு டிராக் செய்யலாம்.
- நாணயம் ஸ்கேனர்
(குறிப்பு: இந்தப் பகுதி இன்றைய  விலையிலேயே வாங்க வேண்டிய பங்கு பரிந்துரை பகுதி அல்ல. இதில் சொல்லப்பட்டுள்ள பங்குகளை வாங்குவது முதலீட்டாளர்களின் தனிப்பட்ட முடிவாகும்!)

கம்பெனி ஸ்கேன் - ஜஸ்ட் டயல்!

இந்த வாரம் நாம் ஸ்கேன் செய்யப்போகும் கம்பெனி 'ஜஸ்ட்டயல் லிமிடெட்’ எனும் நிறுவனம்.
பொருட்களை விற்பவர்களையும், வாங்குபவர்களையும் குறைந்த செலவில் இணைக்கும் ஓர் இணைப்புப் பாலமாய் செயல்படும் நிறுவனம் இது. 'நாங்கள் இந்தியாவின் லோக்கல் சர்ச் இன்ஜின்’ என்று பெருமையுடன் சொல்லிக்கொள்ளும் இந்த நிறுவனம், '2013 நிதியாண்டில் 364 மில்லியன் முறை  எங்களை மக்கள் உபயோகப்படுத்தி உள்ளார்கள்’ என்ற புள்ளிவிவரத்தையும் தருகிறது. இந்தியாவில் உள்நாட்டு வர்த்தகம் குறித்த மிகப் பிரபலமான சர்ச் பிராண்டாக உருவெடுத்துள்ளது. ஏறக்குறைய 35 மில்லியன் உபயோகிப்பாளர்கள் உபயோகித்து அதன் சேவை குறித்து ரேட்டிங் செய்த நிறுவனம் இது.
புதிய தொழிலாக இருக்கிறதே; இந்தத் தொழில் நீண்ட நாட்களுக்கு சரியாகப் போகுமா; முதலீட்டுக்கு உகந்ததா என்ற கேள்வி முதலீட்டாளர் மனத்தில் எழலாம்.   1996-ல் ஆரம்பிக்கப்பட்ட இந்த நிறுவனம் 2007-ல் ஜஸ்ட்டயல் டாட்காம் என்ற வெப்சைட்டினை நிறுவியது.  ஏறக்குறைய 16 வருடங்களாக செயல்பட்டுவரும் தொழில் மற்றும் இந்த பிசினஸ் மாடல் தொடர்ந்து லாபம் ஈட்டியும் வருகிறது.
பர்சனல் கம்ப்யூட்டர்களின் உதவியுடன் இன்டர்நெட்டில் தேடுதல், மொபைல் போன்கள் மூலம் இன்டர்நெட்டில் தேடுதல், வாய்ஸ் மற்றும் எஸ்எம்எஸ் மூலம் தேடுதல் எனப் பல்வேறு தேடுதல் சேவைகளை வழங்கிவருகிறது இந்த நிறுவனம். ஜஸ்ட் டயல் நிறுவனத்தின் ஸ்மார்ட்போன் அப்ளிகேஷன் மிகவும் விசேஷமான சேவைகளான இன்டர்நெட்டின் மூலம் சாப்பாடு ஆர்டர் செய்தல், வொயின் ஆர்டர் செய்தல், ஹோட்டலில் டேபிள் புக் செய்தல், ஆன்லைன் ஷாப்பிங், டாக்டரிடம் அப்பாயின்மென்ட் பெறுதல், மருந்துக் கடைதனில் மருந்து வாங்குதல், மருத்துவ பரிசோதனை லேப்களில் அப்பாயின்மென்ட் போடுதல், பொக்கே ஆர்டர் செய்தல் எனப் பல்வேறு கூடுதல் சேவைகளைத் தருவதாக இருக்கிறது.  
2013-ம் நிதியாண்டில் தேடுதலுக்காக ஜஸ்ட்டயல் உபயோகப்பட்டதைவிட 2014-ல் முடிந்த நிதியாண்டில் ஏறக்குறைய 38% அதிகரித்துள்ளது. இதில் இன்டர்நெட் மூலம் வரும் தேடுதல்கள் கிட்டத்தட்ட 24 சதவிகித வளர்ச்சியையும், மொபைல் இன்டர்நெட் மூலம் வரும் தேடுதல்கள் கிட்டத்தட்ட 126 சதவிகித வளர்ச்சியையும், வாய்ஸ் மூலம் வரும் தேடுதல்கள் கிட்டத்தட்ட 5 சதவிகித வளர்ச்சியையும் கொண்டிருந்தது.
இதில் வாய்ஸ் மூலம் வரும் தேடுதல் குறைவது ஒரு நல்ல டிரெண்ட் என்றே சொல்லலாம். ஏனென்றால், வாய்ஸ் மூலம் வரும் தேடுதலுக்கு பணியாளர்கள் வேலைக்கு வைக்கப்பட்டு அவர்களே பதில் சொல்லவேண்டும். இந்த வகைத் தேடுதல் அதிகரித்தால் சம்பளச் செலவு ஜஸ்ட்டயலுக்கு அதிகமாகும். 2013-ல் முடிவடைந்த நிதியாண்டில் இன்டர்நெட் மற்றும் மொபைல் இன்டர்நெட் தேடுதல்களின் அளவு மொத்த தேடுதல்களில் 84 சத விகிதமாகவும், 2014-ல் அதுவே 88 சத விகிதமாகவும் இருந்தது.
ஜஸ்ட்டயல் வெறும் தேடுதலுக்கான ஒரு நிறுவனம் மட்டுமல்ல. தன்னுடைய சர்வர்களில் பொருட்கள் மற்றும் சர்வீஸ் தருபவர்களின் பட்டியலையும் வைத்துள்ளது.  இந்தப் பட்டியலின் அளவு சென்ற நிதியாண்டைவிட இந்த நிதியாண்டில் ஏறக்குறைய 30 சதவிகித வளர்ச்சியை அடைந்துள்ளது. இதில் பணம் செலுத்தி பட்டியலிட்டவர்களின் எண்ணிக்கை 2013-ம் நிதியாண்டில் 2,06,500 ஆகவும், 2014-ம் நிதியாண்டில் 2,62,150 ஆகவும் இருந்தது. இந்த லிஸ்ட்டிங்கில் பிரீமியம் லிஸ்ட்டிங் என்ற வசதியை அனுபவித் தால் விளம்பரம் செய்பவர்கள் சற்று அதிகத் தொகையை செலுத்த வேண்டியிருக்கும்.  மொத்த பட்டியலில் கிட்டத்தட்ட 23 சதவிகிதம் பிரீமியம் லிஸ்ட்டிங்காக உள்ளது. இந்த பிரீமியம் லிஸ்ட்டிங்கிலிருந்து கிடைக்கும் வருமானம் மொத்த வருமானத்தில் கிட்டத்தட்ட 45 சதவிகித வருமானமாக இருக்கிறது.
வெறும் தேடுதல் (சர்ச்) சேவையில் தொடர்ந்து லாபம் வருமா?, அப்படியே வந்தாலும் அது கணிசமானதாக இருக்குமா என்ற எண்ணம் முதலீட்டாளர்கள் மனத்தில் தோன்றலாம்.
சர்ச் வசதியைத் தாண்டி 'சர்ச் பிளஸ்’ என்ற வசதியை ஜஸ்ட்டயல் தந்துவருகிறது. இதுதவிர, ரியல் டைம் ரிவர்ஸ் ஏலம் என்ற முறையில் பிராண்டட் பொருட்களை விற்பனை செய்கிறது. இந்த முறையில் ஜஸ்ட்டயலுக்கு வரும் தேடுதல் கோரிக்கையை ஏழு நிறுவனங்களுக்கு அனுப்புகிறது ஜஸ்ட்டயல். அந்த ஏழில் யார் குறைந்த விலைக்கு பொருளை விற்பனை செய்கிறார்களோ, அவர்களுடன் ஜஸ்ட்டயலில் தேடுதல் செய்தவர் வியாபாரம் செய்துகொள்வார்.
ஜஸ்ட்டயல் முதல் நிலையாக இந்த ஏழு நிறுவனங்களிடம் இருந்தும் ஒரு சிறுதொகையை கமிஷனாகப் பெறும். ஜஸ்ட் டயலுக்கு வரும் தேடுதலை இந்த நிறுவனங்களுக்கு அனுப்புவதற்கு மட்டுமே இந்த கமிஷன் தொகை. வியாபாரம் நடக்கிறதா, இல்லையா என்று பார்ப்பதில்லை. ஜஸ்ட்டயல் ஏறக்குறைய ஒரு நாளைக்கு 2,000 டீல்களை இந்தவகையில் நடத்துகிறது. சர்ச் பிளஸில் 2013-ம் ஆண்டின் இறுதியில் இருந்த 85,000 வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை 2014-ம் நிதியாண் டின் இறுதியில் கிட்டத்தட்ட 1,40,000-ஆக உயர்ந்துள்ளது.
ஏன் முதலீடு செய்ய வேண்டும்?
ஒரு நூதனமான தொழில் இது. முதலில் முனைபவருக்கும் நல்லதொரு பிராண்டை உருவாக்கிக்கொண்ட நிறுவனங்கள் மட்டுமே இந்தத் தொழிலில் நிலைத்து நிற்க முடியும். அதிகரித்துவரும் பணம் செலுத்தி  பிரீமியம் சர்வீஸை உபயோகிக்கும் வாடிக்கையாளர்கள் இந்த சர்வீஸ் உபயோகமாயிருக்கிறது என்பதற்கு சான்றளிக்கிறது. இன்டர்நெட் மற்றும் மொபைல் இன்டர்நெட்டின் மூலம் வரும் வருவாய் அதிகரித்துக் கொண்டே போவதால் (தொழிலாளர்கள் எண்ணிக்கை குறைவதால்) லாபம் நன்றாக அதிகரிக்கும் வாய்ப்புள்ளது.
ரிஸ்க்குகள் ஏதும் உண்டா?
கம்பெனியின் செயல்பாடு முழுக்க முழுக்க டெக்னாலஜியை நம்பியதாக உள்ளது முதல் ரிஸ்க்காகும். மிகச் சுலபமாக கூகுள் போன்ற நிறுவனங்கள் இந்தத் தொழிலுக்குப் போட்டியாக வந்துவிடும் வாய்ப்பு இருக் கிறது. பொருட்கள் மற்றும் சர்வீஸ் களில் டீல் பண்ணுவதால் சட்டச் சிக்கல்களுக்கும் பஞ்சமிருக்காது.
டெக்னாலஜி மற்றும் இன்டர்நெட்டில் லாபம் பார்க்கும் வகையில் தொழில் நடத்துவது சமீபகாலமாக சற்று சுலபமாகவே இருக்கிறது. எனவே, முதலீட்டாளர்கள், இந்தவகை நிறுவனங்களில் சிறிய அளவில் முதலீடு செய்ய முயற்சிக்கலாம். இன்றைய விலையில் வாங்காமல் ஒரு அசாதாரண நிலையில் விலை இறங்கும்போது மிகவும் குறைந்த எண்ணிக்கையில் இந்தப் பங்குகளை மத்திம (2-4 வருடங்கள்) கால முதலீட்டுக்காக வாங்கிப்பார்க்கலாம்.
- நாணயம் ஸ்கேனர்.
(குறிப்பு: இந்த விலையிலேயே வாங்க வேண்டிய பங்கு பரிந்துரை பகுதி அல்ல. இதில் சொல்லப்பட்டுள்ள பங்குகளை வாங்குவது முதலீட்டாளர்களின் தனிப்பட்ட முடிவாகும்!)

கம்பெனி ஸ்கேன் - டிடிகே பிரெஸ்டீஜ் லிமிடெட்!

இந்த வாரம் நாம் ஸ்கேன் செய்யப்போகும் கம்பெனியின் தயாரிப்புகளில் ஏதாவது ஒன்று ஏறக்குறைய எல்லோருடைய வீட்டின் சமையலறையிலும் இருக்க வாய்ப்புள்ள ஒரு கம்பெனிதான். அந்த கம்பெனியின் பெயர், டிடிகே பிரெஸ்டீஜ் லிமிடெட்.  
தொழில் எப்படி?
வீட்டில் மிக முக்கியமான இடம் சமையலறை. சமையலறை சாதனங்கள் கட்டாயச் செலவாகக் கருதப்படுவதால் வியாபாரத்தின் அளவு என்பது தொடர்ந்து வளர்ச்சியைச் சந்திக்கவே வாய்ப்புள்ளது. இளைஞர்கள் நிறைந்த இந்தியா போன்ற நாட்டில் புதிய குடும்பங்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிக்கும் என்பதால் சமையலறை சாதனங்களுக்கான தேவையின் மொத்த வளர்ச்சியும் தொடர்ந்து அதிகரிக்கவே வாய்ப் புள்ளது. மேலும், வேகமாக வளர்ந்து வரும் பொருளாதாரச் சூழலும், அதிகரிக்கும் சம்பளங்களும் பல்வேறு புதுவிதமான சமையலறை உபகரணங்களின் தேவையை அதிகரிக்கும் என்பதில் சந்தேகமில்லை.
இவ்வளவு பாசிட்டிவான விஷயங் கள் இருந்தபோதிலும் சமையல் சாதனங்கள் துறையில் இருக்கும் ஒரு பெரிய சவால் என்பது சிறு மற்றும் குறு நிறுவனங்களின் தயாரிப்புகள் அளிக்கும் போட்டியாகும். சிறு மற்றும் குறு நிறுவனங்களுக்கு வரி மற்றும் அரசின் கட்டுப்பாடுகள் இல்லை.  விலை குறைவான பொருட்களும், சிறிய கடைகளிலும் பொருட்கள் கிடைக்கும் வண்ணம் விற்பனை உத்திகளைக் கொண்டிருப்பதும், இந்தத் துறையில் சிறு மற்றும் குறு நிறுவனங்களின் பங்கு 50 சதவிகிதத்துக்கும் அதிகம் என்பதும் கவனிக்க வேண்டிய விஷயம்.  
இருப்பினும் அதிகரிக்கும் சம்பளங் களும், உயரும் வாழ்க்கைத்தரமும் தரமான சமையலறை சாதனங்களை நோக்கி வாங்குவோரை நகர்த்துகின்றன. இந்தவகை எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்யவேண்டுமெனில், நல்லதொரு பிராண்ட் மதிப்பும் நீண்டகால அனுபவமும் இந்தத் துறையில் தேவைப் படுகிறது.
கம்பெனி எப்படி?
பிரெஸ்டீஜ் என்ற பிரஷர் குக்கர் பிராண்டின் பெயரை சரிவர உபயோகித்து விரிவாக்கம் செய்து பல்வேறுவிதமான சமையலறை சாதனங்களைத் தயாரித்து வெற்றிகரமாக விற்பனை செய்துவருகிறது இந்த நிறுவனம். பிரஷர் குக்கர் மற்றும் சமையல் உபகரணங்கள் பிரிவில் மிகவும் பழைமையான பிராண்டான பிரெஸ்டீஜ் தன்னுடைய சாதுரியமான திட்டமிடுதலால் இந்த இரண்டு செக்மென்ட்களையும் தாண்டி காஸ் ஸ்டவ்கள், இண்டக்ஷன் குக்கர்/ஸ்டவ், கிரைண்டர், மிக்ஸி, சமைத்த உணவைப் பாதுகாப்பாகவும், சுவை குறையாமலும் வைக்கத் தேவையான பாத்திரங்கள் போன்ற பல்வேறு சமையலறை சாதனங்களைத் தயாரித்து விற்பதில் முன்னணியில் இருக்கிறது.
வெறுமனே பிரஷர் குக்கர் விற்பனை மட்டுமே பெருமளவு லாபத்தைத் தந்துகொண்டிருந்த நிலையை மாற்றி தற்சமயம் மொத்த விற்பனையில் ஏறக்குறைய 50% மட்டுமே பிரஷர் குக்கர் மற்றும் சமையல் சாதனங்கள் பிரிவின் பங்களிப்பு உள்ளது. மீதமுள்ள விற்பனையில் காஸ் ஸ்டவ்கள் மற்றும் சமையலறையில் உதவும் மின்சாதனங்கள் பங்கெடுக்கிறது. தொழிலில் ஏற்படும் போட்டி மற்றும் சிறு மற்றும் குறு நிறுவனங்கள் ஏற்படுத்தக்கூடிய பாதிப்பை நன்குணர்ந்த இந்த நிறுவனம் அந்தப் பாதிப்பைத் தவிர்ப்பதற்கான சரியான நடவடிக்கைகளை எடுத்திருக்கிறது.  
நிர்வாகம் எப்படி?
நீண்டகாலமாக இந்தத் துறையில் இருப்பதாலும், நிறையப் பல புதிய வெற்றிகரமான தயாரிப்புகளை அறிமுகப்படுத்தியதும், ஒரு பிரஷர் குக்கர் கம்பெனி என்ற அடையாளத் திலிருந்து ஒரு முழுமையான  கிச்சன் கம்பெனி என்று ஏறக்குறைய பத்தாண்டு காலத்துக்குள் தன்னை மாற்றிக்கொண்டதிலிருந்தே இந்த நிறுவனத்தின் நிர்வாக குணாதிசயத்தை நம்மால் கணிக்க முடியும்.
ரிஸ்க்குகள் என்னென்ன?
எனினும், சிறு மற்றும் குறு நிறுவனங்களின் போட்டியும், போலிகளின் தாக்கமும் இந்த நிறுவனத்துக்கு ஒரு சவாலாகவே தொடர்ந்து இருந்துவருகிறது. இந்தச் சவால்களைச் சமாளிக்கத் தொடர்ந்து புதுப்புதுத் தயாரிப்புகளையும், ஏற்கெனவே இருக்கும் தயாரிப்புகளில் தொடர்ந்து புதுமைகளையும் செய்துவருகிறது இந்த நிறுவனம். போலிகளை எதிர்த்துப் போராடுவதில் இந்த நிறுவனம் செய்யும் பெரிய அளவிலான தனது தயாரிப்புகளும்,  விளம்பரங்களும், பிரெஸ்டீஜ் ஸ்மார்ட் கிச்சன் ஷோரூம்களும் பெரும்பங்கு வகிக்கின்றன எனலாம்.
பொருளாதாரம் வளமையாக இருக்கும்போது சற்றே விலையுயர்ந்த தயாரிப்புகளையும், வளமை குறையும்போது சாதாரண தயாரிப்பு களையும் வாங்குவது என்பது வாடிக்கையாளர்களின் பாணி. இந்தப் பிரச்னையும் இந்த நிறுவனத்தின் விற்பனையை ஓரளவு பாதிக்கலாம். இந்த நிறுவனத்தின் கடந்தகால வளர்ச்சியைப் பார்த்தோமானால், ஒருவேகம் தெரியும். இந்த வேகமே சிலசமயம் சில பிரச்னைகளைக் கொண்டுவந்துவிடக்கூடும். அதேபோல் அகில இந்திய ரீதியாகச் செயல்பட்ட போதிலும் தென்னிந்தியாவில் மிகப் பெரிய அளவிலான வெற்றியைப் பெற்றுள்ள பிராண்ட் இது. இதுவும் ஒருவகையிலான ரிஸ்க்தான்!
அரசாங்கம் சம்பந்தமான இடர்பாடுகள் பெரிய அளவில் இல்லாத தொழில் இது. விலை குறைந்த தயாரிப்புகள் தொடர்ந்து போட்டிபோட வாய்ப்பிருப்பதால் இதை ஒரு தொடர் ரிஸ்க்காகவே நாம் கருதவேண்டும். சந்தையினைப் பொறுத்தவரை, இந்த நிறுவனத்தின் பங்குகள் இதுபோன்ற நிறுவனங்களின் பங்குகளைவிட சற்று பிரீமியத்திலேயே விற்பனையாகிறது. எனவே, இதனையும் சற்று மனத்தில் நாம் கொள்ள வேண்டியுள்ளது.
எனினும், நீண்டகால அனுபவத்தையும், பிராண்டின் மதிப்பையும், இதுவரையிலான புதிய தயாரிப்புகளில் அடைந்த வெற்றியையும் மனத்தில்கொண்டால் இந்த நிறுவனத்தின் பங்குகளை முதலீட்டுக்காக ஆய்வு செய்வதில் தவறேதும் இல்லை எனலாம்.
ஏற்கெனவே குறிப்பிட்டபடி, இந்தப் பங்குகளின் விலை சற்றே பிரீமியத்தில் வியாபாரமாவதால் ஓர் அசாதாரண சூழலில் சந்தை வேகமாக இறங்கும்போது இந்தப் பங்குகளின் விலையும் இறங்கினால் முதலீட்டாளர்கள் இந்தப் பங்கில் சிறிதளவு முதலீடு செய்யலாம்.
- நாணயம் ஸ்கேனர்.
(குறிப்பு: இந்தப் பகுதி இன்றைய விலையிலேயே வாங்கவேண்டிய பங்கு பரிந்துரை பகுதி அல்ல. இதில் சொல்லப்பட்டுள்ள பங்குகளை வாங்குவது முதலீட்டாளர்களின் தனிப்பட்ட முடிவாகும்!)

கம்பெனி ஸ்கேன் : சோமனி செராமிக்ஸ் லிமிடெட்!

இந்த வாரம் நாம் ஸ்கேன் செய்யப்போகும் கம்பெனி 1968-ம் ஆண்டு, இங்கிலாந்தைச் சார்ந்த பில்கிங்டன்ஸ் டைல்ஸ் என்ற நிறுவனத்துடன் கூட்டுசேர்ந்து ஆரம்பிக்கப்பட்ட சோமனி செராமிக்ஸ் லிமிடெட் எனும் நிறுவனத்தைத்தான்.
கட்டடக்கலையில் பெரும் பங்களிக்கும் இந்த நிறுவனத்தின் தயாரிப்புகள் அத்தியாவசியம் என்ற நிலைமைக்கு ஏறக்குறைய வந்துவிட்டது. வீடோ, அலுவலகமோ தளத்துக்கு செராமிக் டைல்ஸ் என்கிற நிலைமை உருவாகிவிட்டநிலையில், வியாபாரத்துக்குத் தட்டுப்பாடு இல்லாத சூழலே இந்த கம்பெனியின் தொழிலில் நிலவுகிறது.
தொழில் எப்படி?
இந்திய செராமிக் டைல்ஸ் தொழில் ஏறக்குறைய 200 பில்லியன் ரூபாய் வியாபார அளவீட்டை (600 மில்லியன் சதுர மீட்டர் அளவு) கொண்டதாகத் தற்சமயம் இருக்கிறது. இவ்வளவு பெரிய வியாபாரமாக இருந்தாலும் தனிநபர் உபயோகம் (பெர் கேப்பிட்டா கன்ஸம்ப்ஷன்) என்பது இந்தியாவைப் பொறுத்தவரை, மிகக் குறைவாக 0.4 சதுர மீட்டர் என்ற அளவிலேயே இருக்கிறது. ஒரு ஒப்பீட்டுக்காகப் பார்த்தால், இந்த அளவு சீனாவில் 2.6 சதுர மீட்டராகவும், பிரேசிலில் 3.6 சதுர மீட்டராகவும், வியட்நாமில் 3.8 சதுர மீட்டராகவும் இருக்கிறது.
இந்தத் தொழிலில் பெரிய தொழிற்சாலைகளும் (பிராண்டுகளுடன் கூடிய), சிறிய தொழிற்சாலைகளும் (பிராண்ட்கள் அல்லாத) சரிசமமான அளவில் போட்டிபோடுகின்றன. இந்தச் சிறிய அன்-ஆர்கனைஸ்டு தொழிற்சாலைகளில் பெரும்பான்மை யானவை குஜராத்தில் உள்ள மோர்பி என்ற இடத்திலேயே உள்ளன. பிராண்டட் செராமிக் டைல்ஸ் விற்பனையில் டாப் எட்டு நிறுவனங்கள் ஏறக்குறைய 85 சதவிகித சந்தைப் பங்களிப்பை தன்வசத்தே வைத்துள்ளன.
கடந்த ஐந்து ஆண்டுகளில் இந்திய செராமிக் டைல்ஸ் துறை ஏறக்குறைய  14 சதவிகித (சிஏஜிஆர்) அளவீட்டில் வளர்ந்தது. செராமிக் டைல்ஸ் துறையின் உலக அளவிலான சராசரி வளர்ச்சி விகிதத்தைவிட, இது இரண்டு மடங்கு வேகமான வளர்ச்சி என்கிறது புள்ளிவிவரங்கள்.
இந்த வளர்ச்சிக்கு முக்கியக் காரணமாக, வாங்கும் தகுதி கூடுதல், இரண்டாம் நிலை மற்றும் மூன்றாம் நிலை நகரங்களின் வேகமான வளர்ச்சி, மார்பிளுக்குச் சிறந்த ஒரு மாற்றாக செராமிக் டைல்ஸ் கருதப்படுவது மற்றும் ஆர்கனைஸ்டு கட்டுமானத் துறையில் வீடு மற்றும் கமர்ஷியல் கட்டடங்கள் கட்டுவதில் அடைந்துவரும் வேகமான வளர்ச்சி போன்றவையே எனக் கூறப்படுகிறது.
செராமிக் டைல்ஸ் உபயோகத்தில், வீடுகள் கட்டுமானம் ஏறக்குறைய 65 சதவிகித பங்களிப்பை அளிக்கிறது. வீடுகள் கட்டுமானத்தில் செராமிக் டைல்ஸ் உபயோகத்தின் அளவு கடந்த ஐந்து வருடங்களில் இரண்டு இலக்க அளவீட்டில் வளர்ச்சி பெற்று வருகிறது.
கம்பெனி எப்படி?
சோமனி செராமிக்ஸ் நிறுவனம் விற்பனை அளவீட்டில் இந்தியாவின் இரண்டாவது பெரிய செராமிக் டைல்ஸ் நிறுவனமாகும். இந்த நிறுவனமும் கடந்த 5 வருடங்களில் ஏறக்குறைய 14-15 சதவிகித அளவிலான (சிஏஜிஆர்) விற்பனை வளர்ச்சியை எட்டிப்பிடித்து வருகிறது. வேகமாகத் தனது  பிராண்டை வளர்த்துவரும் சோமனி செராமிக்ஸ் விற்பனைக்கு ஈடாக உற்பத்தித்திறன் அளவிலும் வளர்ச்சியை உருவாக்கிக் கொண்டிருக்கிறது. பெரும்பாலும், இந்த உற்பத்தித்திறன் கூட்டு முதலீடுகளின் (ஜேவி) மூலமே செயலாக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது.
2005-11ம் ஆண்டு காலகட்டத்தில் அவுட்சோர்ஸிங் என்ற கொள்கையில் செயல்பட்டுவந்ததால் பெரிய அளவிலான உற்பத்தித்திறன் அதிகரிப்பை சோமனி செராமிக்ஸ் ஏற்படுத்திக்கொள்ளவில்லை என்ற போதிலும், 2012-ம் ஆண்டு முதல் பெரும் முயற்சிகளைச் செய்து ஏறக்குறைய தனது உற்பத்தித்திறனை இரண்டு மடங்காக உயர்த்தியுள்ளது. உற்பத்தித்திறன் அதிகரிப்பை கூட்டு முதலீட்டுத் (ஜேவி) திட்டங்கள் மூலமே பெருமளவில் செயல்படுத்தி வருகிறது சோமனி செராமிக்ஸ்.
தற்சமயம் ஏறக்குறைய அகில இந்திய ரீதியாக 1,700 டீலர்களை வைத்திருக்கும் சோமனி செராமிக்ஸ் இந்த நிதியாண்டின் இறுதியில் மேலும் 75 டீலர்களைச் சேர்க்க திட்டங்களை வைத்துள்ளது. புதிய டீலர் நெட்வொர்க்கை இரண்டாம் நிலை மற்றும் மூன்றாம் நிலை நகரங்களில் உருவாக்குவதன் மூலம், வேகமாக வளர்ந்துவரும் இந்த நகரங்களில் விற்பனையை அதிகரிக்கலாம் என்ற எண்ணத்துடன் செயலாக்கி வருகிறது சோமனி செராமிக்ஸ்.
சோமனி செராமிக்ஸின் மொத்த விற்பனை வடஇந்தியாவில் ஏறக்குறைய 36 சதவிகிதமும், தென் இந்தியாவில் 33 சதவிகிதமும், மேற்கு இந்தியாவில் 13 சதவிகிதமும், கிழக்கு இந்தியாவில் 15 சதவிகிதமும், எஞ்சிய இடங்களில் 3 சதவிகிதமும் பங்களிப்பைத் தருகிறது.
தற்சமயம், செராமிக் கிளேஸ்ட் டைல்ஸை மூன்று தொழிற்சாலை களிலும், பாலிஷ்டு விட்ரிஃபைட் டைல்ஸ் களை மூன்று தொழிற்சாலைகளிலும், கிளேஸ்ட் விட்ரிஃபைட் டைல்ஸை ஒரு தொழிற்சாலையிலும் உற்பத்தி செய்துவருகிறது. ஏறக்குறைய ஐம்பது வருடங்களாக செராமிக் டைல்ஸ் துறையில் இருந்துவருகிறபோதிலும் சோமனி செராமிக்ஸ் பிரீமியம் டைல்ஸ் விற்பனையில் பெரும் பங்கு வகிப்பது இல்லை என்பது ஒரு சிறிய குறைதான். இதனை உணர்ந்த சோமனி செராமிக்ஸ் நிறுவனம்,  டிவி, பத்திரிகை, சோஷியல் மீடியா என பல ஊடகங்கள் மூலமாகத் தனது பிராண்டை வளர்க்க கடினமான முயற்சிகளைத் தற்போது எடுத்து வருகிறது.
போட்டி எப்படி?
அன்ஆர்கனைஸ்டு செக்டார் எனப்படும் சிறு மற்றும் குறுந் தொழில்கள் ஏறக்குறைய 50 சதவிகித விற்பனையைச் செய்து கடும் போட்டியைத் தருகின்றன. மீதமிருக்கும் சந்தை அளவில் ஏறக்குறைய 12 நிறுவனங்கள் தங்கள் பங்களிப்பைத் தருகின்றன. ஹெச் அண்ட் ஆர் ஜான்ஸன், கஜாரியா, சோமனி, நிட்கோ, ஏசியன் கிரானிட்டோ, ராக், ஓரியன்ட் பெல், வர்மோரா, ரீஜென்சி, பெல்கிரானிட்டோ, முர்தேஷ்வர், யூரோ போன்ற பெரிய நிறுவனங்கள் இந்தத் துறையில் கோலோச்சுகின்றன.
சோமனி செராமிக்ஸ் இந்த நிறுவனங்களிடையே விற்பனை அளவீட்டில் மூன்றாவது இடத்தைத் தக்கவைத்துக் கொண்டிருக்கிறது. இது தவிர, இறக்குமதி செய்யப்படும் செராமிக் டைல்ஸ்களும் சந்தையில் போட்டியாக விற்பனை செய்யப்படுகிறது.
பொருளாதார வளர்ச்சி அதிகமாகும் போது வீடுகளுக்கான தேவையும் அதிகரிக்கும். அந்தச் சூழலில் இந்த அனைத்து நிறுவனங்களுமே விற்பனையை அதிகரிக்கப் பாடுபடும். ஏற்கெனவே தங்களுடைய பிராண்டின் மதிப்பைக் கூட்டிக்கொள்ளவும், புதிய உற்பத்தித்திறனை உருவாக்கிக் கொள்ளவும் அனைத்து நிறுவனங் களுமே தயாராகி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
ரிஸ்க் ஏதும் உண்டா?
பொருளாதாரச் சுணக்கம் தீர்ந்து வளர்ச்சிப் பாதையில் நாடு பயணிக்க ஆரம்பித்தால் நிறைய லாபம் பார்க்கும் வாய்ப்பு இந்த நிறுவனத்துக்கு  உண்டு எனலாம். பொருளாதாரச் சுணக்கம் தீர்வதற்கு கொஞ்ச நாட்கள் பிடித்தால் அதுவரையிலும் விற்பனை வளர்ச்சியிலும் சற்று சுணக்கம் ஏற்படலாம்.
பிரீமியம் பிராண்ட் ஆவதற்கான முயற்சிகளை எடுக்கும்போது நிறைய விளம்பரச் செலவினங்கள் வரும். இந்தச் செலவினங்கள் வரும்போது வருவாயும் கணிசமாக உயருவதற்கான விற்பனைச் சூழல் நிலவினாலே முதலீட்டாளர்கள் லாபம் பார்க்க முடியும்.
இந்தத் துறையில் நீண்ட அனுபவம் கொண்ட மேனேஜ்மென்ட் என்பதால் பெரிய பாதிப்பை ஏற்படுத்தாமல் பார்த்துக்கொள்ளும் பக்குவம் இருக்கிறது என்ற போதிலும் சிறிய அளவில் இந்த ரிஸ்க் இருப்பதை மறுப்பதற்கில்லை.
ஏன் முதலீட்டுக்கு பரிசீலிக்கலாம்?
வீடு என்பது ஒவ்வொரு மனிதனின் கனவு. அந்தக் கனவை நனவாக்க முயலுகையில் செராமிக் டைல்ஸ் மிகவும் அத்தியாவசியமானதாக உள்ளது.
நீண்ட நாட்கள் இந்தத் துறையில் இருப்பதாலும், விற்பனை அளவில் போட்டியாளர்கள் மத்தியில் இரண்டாம் நிலையில் இருப்பதாலும் இந்த நிறுவனம் வளர்ச்சிப் பாதையில் பயணிக்க வாய்ப்பு சற்று அதிகமாக இருப்பதுபோலவே தோன்றுகிறது. இதனாலேயே சந்தை ஓர் அசாதாரணச் சூழலில் இறங்கும்போது இந்தக் கம்பெனியின் பங்குகளில் முதலீடு செய்வதற்காக முதலீட்டாளர்கள் டிராக் செய்வதில் தவறேதும் இல்லை எனலாம்.
- நாணயம் ஸ்கேனர்.
(குறிப்பு: இந்தப் பகுதி இன்றைய  விலையிலேயே வாங்க வேண்டிய பங்கு பரிந்துரை பகுதி அல்ல. இதில் சொல்லப்பட்டுள்ள பங்குகளை வாங்குவது முதலீட்டாளர்களின் தனிப்பட்ட முடிவாகும்!)

மல்டி அசெட் ஃபண்ட் லாபம் தருமா?

ச.ஸ்ரீராம்
முதலீட்டுக்கான வாய்ப்பு என்று வரும்போது பங்குச் சந்தை, கடன் திட்டங்கள், தங்கம் என பல வரும். இவை அனைத்தையும் உள்ளடக்கிய முதலீடுதான் மல்டி அசெட் ஃபண்ட்கள்.  இந்த மல்டி அசெட் ஃபண்ட்கள் நல்ல லாபம் தருமா என்பது பற்றி நிதி ஆலோசகரும், ஃபார்ச்சூன் பிளானர் நிறுவனத்தின் இயக்குநருமான பி.பத்மநாபன் விளக்கிச் சொன்னார்.
'கடன் சார்ந்த திட்டங்கள், ஈக்விட்டி மியூச்சுவல் பண்ட், கோல்டு ஃபண்ட்களில் தனித் தனியாக முதலீடு செய்வதற்குப் பதிலாக, ஒரே ஃபண்டில் முதலீடு செய்யும்விதமாக வந்திருப்பது தான், மல்டி அசெட் ஃபண்ட்.
இதிலும் பலவகை இருக்கிறது. அதிகம் கடன், கொஞ்சம் ஈக்விட்டி திட்டம் என்பது  மன்த்லி இன்கம் பிளான் ஆகும். அதேசமயம், 65% ஈக்விட்டி மற்றும் 35% கடன் சார்ந்தவை பேலன்ஸ்டு திட்டங்களாகும். கடன் சார்ந்த திட்டத்துக்குப் பதில் தங்கத்தை வைத்து மன்த்லி இன்கம் பிளஸ் என்கிற திட்டத்தைக் கொண்டுவந்தார்கள். இந்த மூன்றையும் சரிசமமாகப் பங்கிட்டு அதற்கு 'ட்ரிபிள் அட்வான்டேஜ் திட்டம்’ என்று ஒரு திட்டத்தை பிற்பாடு கொண்டுவந்தார்கள். இந்த மல்டி அசெட் ஃபண்ட் திட்டங்கள் யாவும், ஈக்விட்டி தவிர வேறு ஒரு முதலீடு (உதாரணமாக, பங்குச் சந்தை இறக்கத்திலும், தங்கத்தின் விலை ஏற்றத்திலும் இருந்த காலத்தில்) லாபகரமாக இருந்தபோது ஆரம் பிக்கப்பட்டது.
இந்த  ஃபண்ட்களைத் தேர்வு செய்யும் போது, அதன் போர்ட்ஃபோலியோவின் பங்கு முதலீட்டில் பங்களிப்பு 65%க்கு மேல் இருக்கும்படி பார்த்துக்கொள்ள வேண்டும். அதாவது, மல்டி அசெட் ஃபண்டின் போர்ட்ஃபோலியோவில் 65%க்கு மேல் பங்குகளில் முதலீடு இருந்தால் வரிச் சலுகை இருக்கிறது. அதாவது, அது ஈக்விட்டி ஃபண்டாக இருக்க வேண்டும்.
ஈக்விட்டி திட்டத்தின் மிகப் பெரிய பலமே, ஒரு வருடத்துக்குப் பிறகு அதன் யூனிட்களை விற்கும்போது, வருமான வரி கிடையாது. அதேநேரத்தில் ஓராண்டுக்குள் விற்றால் குறுகிய கால மூலதன ஆதாய வரி 15% கட்டவேண்டி வரும்.
மல்டி அசெட் ஃபண்டில் இந்த மாதிரி காம்போ செய்யும்போது ஈக்விட்டி 65 சதவிகிதத்துக்கு கீழே இருந்தால் அதற்கு கடன் சார்ந்த திட்டத்தின் வரியாக (ஒரு வருடத்துக்குள்) அவரவர் அடிப்படை வருமான வரி விளிம்புக்கு ஏற்ப 10%, 20%, 30% வரி கட்டவேண்டி வரும். மேலும், ஒரு வருடத்துக்குப்பின் இண்டக்சேஷன் பெனிஃபிட் இல்லாமல் 10%, இண்டக்ஸ் பெனிஃபிட்டுடன் 20% வரி கட்ட வேண்டி வரும். இது அவர்களுடைய வரிக்குப் பிந்தைய வருமானத்தைப் பாதிக்கும்.
தங்கம் கடந்த 5 வருடம் தாறுமாறாக விலை ஏறியதால், எல்லாருக்கும் அதன்மேல் ஒரு ஈடுபாடு ஏற்பட்டது. தங்கமானது வருங்காலத்தில் குறைந்த அளவு வருமானம் அல்லது நெகட்டிவ் வருமானம் தரவே வாய்ப்புகள் அதிகம். அப்படி இருக்கும்போது இந்த காம்போக்களைத் தவிர்ப்பது நல்லது. இந்த காம்போக்களின் நோக்கமே இந்த ஃபண்டின் மீது முதலீட்டாலர்களுக்கு ஒரு கவர்ச்சியை உருவாக்கத்தான்.
கடந்த ஒரு வருடத்தில் சென்செக்ஸ் (2013, மே 30 வரை) ஏறக்குறைய 20% அதிகரித்திருக்கிறது. தங்கம் 14% விலை குறைந்திருக்கிறது. அரசாங்க பத்திரங்கள் (G-Sec) மதிப்பு 2% வரை உயர்ந்துள்ளது. இந்த ஓராண்டில் தங்கத்தின் பங்களிப்பு குறைவாக இருந்த மல்டி அசெட் ஃபண்ட்கள் 21% வருமானம் தந்திருக்கின்றன. இதன் போர்ட்ஃபோலியோவில் தங்கம் அதிகமாக உள்ள ஃபண்ட்கள் ஏறக்குறைய 3% வரை வருமானம் தந்திருக்கின்றன.
எந்த முதலீடு என்ன லாபம் தரும் என்று கண்டுகொள்வது கடினம். அப்படி இருக்கும்போது இந்த மாதிரி திட்டங்களைத் தவிர்ப்பது நல்லது.  அந்த வகையில் மல்டி அசெட் ஃபண்ட் சிறந்த திட்டமாக இருக்காது.
அதேசமயம், நாம் முதலீடு செய்த ஒன்றில் அதிக நஷ்டம் ஏற்படும்போது அதிக லாபம் தந்த திட்டங்களில் சேர்ந்திருக்கலாமோ என்று தோன்றும்.  நமது மொத்த முதலீட்டையும் சேர்த்து லாபமா, நஷ்டமா என்று பார்க்கும் போது தனித் தனியாக முதலீட்டுத் திட்டங்களைத் தேர்வு செய்வதே நல்ல பலனை தரும்.
இந்தத் திட்டத்தை விற்பவர்கள் நாங்கள் ஆட்டோமேட்டிக்காக பேலன்ஸ் செய்வோம் என்று சொல்கிறார்கள். ஒரு திட்டத்தில் லாபம் ஏற்படும்போது அந்த லாபத்தை எடுத்து மற்றொன்றுக்கு மாற்றுவார்கள். மேலும், இதை நாங்களே செய்வதற்கு பதிலாக, அல்காரிதம் என்கிற புரோக்ராமை 
பயன்படுத்துவதாகவும் சொல்கிறார்கள்.  இதில், இத்தனை சதவிகிதம் என்று ஒரு வரையறை வகுக்கும்போது சில சிக்கல்களை சந்திக்க வாய்ப்புள்ளது. அவ்வாறு வரையறை இல்லை எனில்  இந்தத் திட்டம் ஓரளவுக்குப் பயனுள்ளதாக இருக்கும்.

இந்த வகையைச் சேர்ந்த பேலன்ஸ்டு திட்டங்கள் சிறப்பாகச் செயல்பட்டு வருகின்றன. அவர்களே பேலன்ஸ் செய்வதால் நமக்கு டென்ஷன் கிடையாது. மற்றபடி மல்டி அசெட் ஃபண்ட்கள் பெரிதாக இதுவரை வெற்றி அடையவில்லை என்றே சொல்லலாம்.
இந்தத் திட்டத்துக்கு வருமான வரி, கடன் சார்ந்த திட்டங்களுக்கு உள்ளதுபோல் அதிக வரிச் செலுத்தவேண்டும். மேலும், இதை நிர்வகிப்பதற்கு ஆகும் செலவும் மற்ற ஃபண்ட்களைவிட கொஞ்சம் அதிகம்.
இந்தத் திட்டங்களில் ரிஸ்க் குறைவு என்று நினைப்பது தவறு. வருமான ரிஸ்க் அதிகம். இந்த மல்டி அசெட் ஃபண்ட் போர்ட்ஃபோலியோவில் பங்குகள், தங்கம் இருக்கிறது என்கிறபோது ஒன்று லாபம் தந்தால் மற்றொன்று இழப்பில் இருக்கும். அந்த வகையில், இதன் வருமானம் குறிப்பிட்ட சதவிகிதத்துக்குமேல் செல்லாது. அதாவது, ரிஸ்க் எடுப்பதற்கேற்ப வருமானம் கிடையாது. கடந்த 3 ஆண்டுகளில் 8.8% வருமானம் மட்டுமே தந்துள்ளது.
தங்கத்தில் முதலீடு செய்ய வேண்டும் என்பதற்காக இந்தத் திட்டத்தில் சேர வேன்டியதில்லை. ஒருவர் 5 வருடம் காத்திருக்க தயார் எனில், டைவர்சிஃபைட் மியூச்சுவல்  ஃபண்ட் திட்டத்தில் இணைந்து பயன் பெறலாம். மற்றபடி இந்தத் திட்டத்தில் முதலீடு செய்வதால் பெரிய பயன் ஏதும் இல்லை'' என்றார் பத்மநாபன்.
இந்தத் திட்டத்தில் முதலீடு செய்யும்முன் முதலீட்டாளர்கள் நன்கு யோசித்து முடிவெடுப்பது நல்லது!

புது நிதியாண்டில்...முதலீட்டுக்கு ஏற்ற பங்குகள்!


சி.சரவணன்
புதிய நிதி ஆண்டு, அதிக முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கிறது. காரணம், நாடாளுமன்ற தேர்தல் நடந்து புதிய மத்திய அரசு அமையப்போகிறது. இந்த நிதி ஆண்டு, பங்கு முதலீட்டாளர்களுக்கு நல்ல முதலீட்டு வாய்ப்பை அள்ளிகொடுக்கும் என்கிறார், மும்பையைச் சேர்ந்த பங்குச் சந்தை நிபுணர் ஏ.கே.பிரபாகர். அது எப்படி நடக்கும் என்பதை விரிவாக விளக்கி சொன்னார்.

''2014 ஏப்ரல் முதல் தேதி முதல் 2015 மார்ச் 31-ம் தேதிக்குள் நிஃப்டி புள்ளிகள், ஒருமுறையாவது 6000-க்கு கீழே இறங்க அதிக வாய்ப்பிருக்கிறது. இந்த இறக்கத்துக்குப் பிறகு சந்தை மேலே சென்றுவிடும். 74 மாதங்களுக்குப் பிறகு, நிஃப்டி பழைய உச்சத்தைத் தாண்டி, இப்போது நிலை பெற்றிருக்கிறது. இந்திய பங்குச் சந்தைக்கான ஏற்றம் 2013 ஆகஸ்ட் மாதத்திலேயே தொடங்கிவிட்டது. இது 2016-17-ம் ஆண்டுவரைக்கும் தொடரும். இந்த ஏற்றச் சந்தையில் கரெக்ஷன் என்பது வரவேற்கத்தக்கதே. அதனை முதலீட்டுக்கான வாய்ப்பாகப் பயன்படுத்திக்கொள்வது உங்கள் கையில்தான் இருக்கிறது.
நிஃப்டியின் தற்போதைய மேஜர் ரெசிஸ்டன்ஸ் 6800-ஆக உள்ளது. தேர்தலுக்குமுன் இதனைத் தாண்டவில்லை என்றால் இன்னும் 3 அல்லது 4 வாரத்தில் நிஃப்டி 6000 அளவுக்கு இறங்க வாய்ப்பிருக்கிறது. சந்தையில் தற்போது நிலவும், செல்லிங் பிரஷர் மற்றும் பிராஃபிட் புக்கிங் இதனை உறுதிப்படுத்துவதாக இருக்கிறது.
2015 மார்ச் மாதத்துக்குள் நிஃப்டி புள்ளிகள் 7800-8600-க்கு செல்ல வாய்ப்பிருக்கிறது. 2016 ஜூன் - டிசம்பரில் நிஃப்டி புள்ளிகள் இலக்கு 13500 - 15000'' என்றவர், சற்று நிறுத்தி... ''பாரதிய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி (என்டிஏ) ஆட்சிக்கு வந்தால், பொதுத்துறை நிறுவனங்கள், சிமென்ட், மின்சாரம், இன்ஃப்ராஸ்ட்ரக்சர் உள்ளிட்ட துறைகள் வேகமான வளர்ச்சியைக் காணும். அந்தவகையில், 16 பங்குகளைப் பரிந்துரை செய்கிறேன்'' என்றவர் பங்குகளைச் சொன்னார்.

 கடந்த 2 - 3 ஆண்டுகளாக ஸ்டீல் உற்பத்தித்திறன் அதிகரிக்கப்படவில்லை. 2014-15-ம் ஆண்டில் செயில் நிறுவனம், அதன் உற்பத்தித்திறனை அதிகரிக்க உள்ளது. புதிய ஆட்சி அமைந்து, அது உள்கட்டமைப்பு பணிகளுக்கு அதிகம் செலவிடும். அப்போது ஸ்டீல் தேவை உயரும். இது, செயில் நிறுவனத்துக்கு லாபமாக அமையும். இந்த நிறுவனப் பங்கின் விலை புத்தக மதிப்புக்கு குறைவாக இருப்பது கவர்ச்சிகரமான அம்சம்.

 ரொக்க கையிருப்பு அதிகம்கொண்ட கம்பெனி (மார்ச் 2013-ல் ரூ.2,598 கோடி) என்பதோடு கடனில்லா நிறுவனமும் கூட. மாங்கனீஸ் உற்பத்தியில் இந்தியாவின் பெரிய நிறுவனமான இதற்கு அண்மையில் புதிதாகச் சுரங்கம் ஒன்று கிடைத்திருக்கிறது. ஸ்டீல் தேவை அதிகரிக்கும்போது, கூடவே மாங்கனீஸ் தேவையும் உயரும். அப்போது மொயில் நிறுவனத்தில் லாபம் மேம்படும்.

 பொதுத்துறையைச் சேர்ந்த மகாரத்தின நிறுவனமான இது, ஆசியாவிலேயே மிகப் பெரிய மின் உற்பத்தி நிறுவனமாக இருக்கிறது. இதன் தற்போதைய உற்பத்தித்திறன் ஆண்டுக்கு 42,964 மெகா வாட்-ஆக உள்ளது. இது இன்னும் 3 - 4 ஆண்டுகளில் 60,000 மெகா வாட்-ஆக அதிகரிக்கப்பட உள்ளது. ஒருங்கிணைந்த மின் உற்பத்தி நிறுவனமாக இருப்பது இதன் சிறப்பு அம்சம்.

 பொதுத்துறை நிறுவனமான இது, அண்மையில் ஃபாலோ ஆன் இஸ்யூ வந்தது. இதற்கு சுமார் 3 மடங்கு அதிக ஆதரவு கிடைத்தது. ஆயில் அண்ட் காஸ் கட்டுமான பிரிவில் அரை நூற்றாண்டு காலமாகச் சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது. ரொக்க கையிருப்பு (மார்ச் 2013-ல் ரூ.2,069 கோடி) அதிகமாகக்கொண்டிருக்கும் கம்பெனி என்பதோடு கடனில்லா நிறுவனம்.

 அண்மையில் இந்த நிறுவனம், அதன் ஒட்டுமொத்த பிரிவுகளை மறுசீரமைப்பு செய்துள்ளது. இதன்மூலம் உற்பத்திச் செலவு கணிசமாகக் குறைந்துள்ளது. இதன்மூலம் விலையைக் குறைத்து, போட்டி நிறுவனங்களுக்கு வலிமையான சவாலை ஏற்படுத்தியிருக்கிறது. ஆர்டர்கள் அதிகரித்திருப்பதும் இந்த நிறுவனத்துக்குக் கூடுதல் பலம்.

 இந்த நிறுவனத்தின் மின் உற்பத்தி 75% காஸ் மூலமும், 25% கோல் மூலமும் நடக்கிறது. அண்மையில் உள்நாட்டில் காஸ் போதிய அளவுக்குக் கிடைக்கவில்லை என்பதால் சர்வதேச சந்தையில் அதிக விலை கொடுத்து வாங்கவேண்டி இருந்தது. இந்த நிலை மாறி உள்நாட்டியிலேயே ரிலையன்ஸ், ஓ.என்.ஜி.சி, ஆயில் இந்தியா போன்ற நிறுவனங்களிடம் குறைந்த விலையில் வாங்கும்நிலை உருவாகி இருக்கிறது. இது டாரன்ட் பவருக்கு பாசிடிவ்வான விஷயம்.


தமிழ்நாட்டைச் சேர்ந்த இந்த நிறுவனம்தான் இந்தியாவிலேயே உற்பத்தித் துறையில் முதன்முதலாக ஐஎஸ்ஓ 9000 தரச் சான்றிதழ் பெற்ற நிறுவனம். ஆட்டோ உதிரிபாகங்கள் தயாரிப்பில் ஈடுபட்டுவரும் இந்த நிறுவனத்தின் தொழிற்சாலைகளில் இதுவரை வேலைநிறுத்தம் என்பதே கிடையாது. அந்தவகையில் இதன் செயல்பாடு எப்போதும் சிறப்பாக இருந்து வருகிறது.

 டீசல் மற்றும் காஸ் இன்ஜின் தயாரிப்பில் இந்தியாவின் முன்னணி நிறுவனமாக கும்மின்ஸ் இந்தியா இருக்கிறது. இதன் வருமானத்தில் 30 சதவிகிதம் ஏற்றுமதி மூலம் வந்துகொண்டிருக்கிறது. அண்மைக்காலத்தில் பல பங்கு தரகு நிறுவனங்கள் கும்மின்ஸ் இந்தியா பங்கை வாங்க பரிந்துரை செய்து வருகின்றன.

 இந்திய அளவில் அதிகத் தொலைவு சாலைகளை (சுமார் 13,100 கி.மீ) நிர்வகிக்கும் நிறுவனமாக இது இருக்கிறது. ரொக்க கையிருப்பு 1,930 கோடி ரூபாய் என்பது இதன் கூடுதல் பலம்.ஸ்பெயின், போர்ச்சுக்கல், லத்தீன் அமெரிக்கா போன்ற நாடுகளில் இந்த நிறுவனம் கால்பதித்து சிறப்பாக இயங்கி வருகிறது.

 சிமென்ட் துறையில் இந்த நிறுவனம் வலிமையான இடத்தில் இருக்கிறது. கடந்த 2 - 3 ஆண்டுகளாக நாட்டில் சிமென்ட் தேவை என்பது குறைந்து காணப்பட்டதால், உற்பத்தித்திறன் அதிகரிக்கப்படவில்லை. புதிய ஆட்சி அமைந்து உள்கட்டமைப்புக்கு அதிகம் செலவு செய்யும்போது சிமென்ட் தேவை தானாகவே கூடிவிடும். இது ராம்கோ சிமென்டுக்கு லாபகரமாக அமையும்.

 ஒரு ரியல் எஸ்டேட் நிறுவனம், சிறப்பாக - லாபகரமாக இயங்க வேண்டும் என்றால், அது நம்பிக்கைக்குரிய நிறுவனமாக இருக்க வேண்டும். அதுபோன்ற ஒரு நிறுவனம்தான் கோத்ரெஜ் பிராபர்டீஸ். இந்த நிறுவனத்தின் டீலிங் எல்லாம் காசோலை வழி நடப்பதால் மோசடி என்கிற பேச்சுக்கே இடம் இல்லை. இதன் புராஜெக்ட்கள் நன்றாக இருக்கிறது. மேலும், கார்ப்பரேட் கவர்ன்ஸ் மிகச் சிறப்பாக இருக்கிறது.
 டாடா குழுமத்தைச் சேர்ந்த இந்த நிறுவனம் அக்ரோ கெமிக்கல் தயாரிப்பில் முன்னணி நிறுவனமாக இருக்கிறது. இதன் செயல்பாடு அதிக நாட்களாக நன்றாக இல்லாமல் இருந்தது. விரிவாக்கத்தில் களம் இறங்கியபிறகு  நிறுவனத்தின் செயல்பாடு மேம்படத் தொடங்கி இருக்கிறது. அந்தவகையில் இந்த நிறுவனப் பங்கின் விலையும் கணிசமாக அதிகரிக்கக்கூடும்.

 டாடா குழுமத்தைச் சேர்ந்த இது தேயிலை, காபி தூள், வேளாண் பொருட்கள் உற்பத்தியில் ஈடுபட்டு வருகிறது. அண்மையில் கரெக்ஷனை சந்தித்த இந்த நிறுவனப் பங்கின் விலை உயரத் தொடங்கி இருக்கிறது.

 200 ஆண்டு பாரம்பரியம் கொண்ட இந்தியாவின் மிகப் பெரிய பொதுத்துறை வங்கி. இதன் ஏடிஎம் மையங்களின் எண்ணிக்கை 21,000-க்கு மேல். தொழில்நுட்பத்தில் முன்னணியில் இருக்கிறது.
வங்கியின் புதிய சேர்மனாக அருந்ததி பட்டாச்சாரியா வந்தபிறகு வங்கியின் செயல்பாடுகள் முன்பைவிட வேகமெடுக்க ஆரம்பித்திருக்கிறது. அந்தவகையில் லாபம் மேம்படும்.

 4,550-க்கும் மேற்பட்ட கிளைகளும், அதற்கு இணையான எண்ணிக்கையில் ஏடிஎம் மையங்களும் உள்ளன. கேன்ஃபின் ஹோம்ஸ் உள்ளிட்ட 7 துணை நிறுவனங்களைக் கொண்டுள்ளது.


இந்தியாவின் சர்வதேச வங்கி என்று அழைக்கப்படும் இது தொழில்நுட்ப வசதிகளை வாடிக்கையாளர்களுக்கு அளிப்பதில் முன்னணியில் இருக்கிறது.
பரிந்துரை செய்த பங்குகளில் நிதானமாக எஸ்ஐபி முறையில் முதலீட்டை இப்போதே ஆரம்பித்துவிடலாம். சந்தை மிகவும் இறங்கும் நேரத்தில் முதலீட்டை கொஞ்சம் அதிகரித்துக்கொள்ளலாம். பொதுத்துறை வங்கிகள், போதிய பங்கு மூலதனம் இல்லாமல் அவதிப்பட்டுக்கொண்டிருக்கும் நிலையில், அந்தப் பங்குகளைப் பரிந்துரை செய்வது ஏன் என முதலீட்டாளர்கள் குழம்பக்கூடும். பாரதிய ஜனதா தலைமையிலான அரசு மத்தியில் அமையும்பட்சத்தில் அரசுத் துறை நிறுவனங்களில் அரசியல் தலையீடு குறைந்துவிடும். அப்போது இந்த வங்கிகளின் செயல்பாடு தானே மேம்பட்டுவிடும்'' என்றார்.
* இலக்கு விலை 12 முதல் 15 மாதங்கள். பங்கு விலை மார்ச் 27 நிலவரம்.

பெரிய வார்த்தைகள், எளிய அர்த்தஙக்ள்! - 1


நன்றி - நாணயம் விகடன்.