கம்பெனி ஸ்கேன் - கோல்டே பாட்டீல் டெவலப்பர்ஸ் லிமிடெட்!

நாணயம் விகடன் இதழில் வெளியான கட்டுரை....
இந்த வாரம் நாம் ஸ்கேன் செய்யப்போகும் கம்பெனி ஒரு ரியல் எஸ்டேட் கம்பெனி. ரியல் எஸ்டேட் நிறுவனமா என்று வியக்க வேண்டாம். இப்போது இந்தத் துறையில் சில சிக்கல்கள் இருந்தாலும், பொருளாதாரம் மீண்டும் நல்ல நிலைக்கு வரும்போது நல்ல லாபம் கிடைக்க வாய்ப்புண்டு. அந்த  வகையில்தான் இந்த வாரம் நாம் ஸ்கேன் செய்யப்போகும் கம்பெனி கோல்டே பாட்டீல் டெவலப்பர்ஸ் லிமிடெட்.
நிறுவனம் எப்படி?
இது, மஹாராஷ்ட்ராவில் உள்ள புனேயில் ஒரு தலைசிறந்த நிறுவனமாகும். புனேயில் ரியல் எஸ்டேட் சந்தையில் கிட்டத்தட்ட 10% வரையிலான பங்களிப்பைக் கொண்டுள்ளது இந்த நிறுவனம். கடந்த ஆண்டு இறுதியில் கிட்டத்தட்ட 440 ஏக்கர் வரையிலான நிலத்தைத் தன்வசத்தே வைத்துள்ளது இந்த நிறுவனம்.
ஆரம்பகாலத்தில் வணிக வளாகம் மற்றும் வீடுகள் கட்டுமானத்தில் ஈடுபட்டிருந்த இந்த நிறுவனம், உலகப் பொருளாதாரத்தில் சுணக்கம் வந்தபின்னர் வணிக வளாகங்கள் தொழிலில் இருக்கும் ரிஸ்க்குகளை முழுமையாகப் புரிந்துகொண்டு படிப்படியாக வணிக வளாகக் கட்டுமானத்திலிருந்து விலகிவருகிறது. சமீபத்திய கணக்கெடுப்பின்படி,  இந்த நிறுவனத்தின் மொத்த கட்டுமான வியாபாரத்தில் குடியிருப்பு வீடுகளின் அளவீடு 90 சதவிகிதமாகவும், வணிக வளாகங்களின் அளவீடு 10 சதவிகித மாகவும் இருந்துவருவது குறிப்பிடத் தக்கது.
இந்த நிறுவனம் ஏறக்குறைய 50 சதவிகிதத்துக்கும் மேலான நிகர லாபத்தை (சிஏஜிஆர்) தந்துவந்துள்ளது. அதிலும், கடந்த நான்கு ஆண்டுகளில் அனைத்து கட்டுமான நிறுவனங் களுமே லாபத்தை ஈட்ட முடியாமல் தவிக்கும் காலத்திலும் இந்த நிறுவனம் கணிசமான லாபத்தை ஈட்டியிருக்கிறது.  
இந்த நிறுவனத்துக்குத் தேவையான பணம் தொடர்ந்து கிடைக்க வாய்ப்புள்ளதா என்று பார்த்தால் இரண்டு பிரைவேட் ஈக்விட்டி நிறுவனங்களுடன் நல்லதொரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தைச் செய்துகொண்டுள்ளது.
ஒரு ரியல் எஸ்டேட் நிறுவனம், தொடர்ந்து லாபம்பார்க்க வேண்டுமெனில், நல்ல பல புராஜெக்ட்களைத் தொடர்ந்து நிர்மாணம் செய்து விற்றாக வேண்டும். இந்தக் கோணத்தில் இந்த நிறுவனத்தின் திட்டங்களை அலசினாலும் நல்ல லாபம் தரக்கூடிய பல புதிய புராஜெக்ட்களைத் தொடர்ந்து நிர்மாணிக்கும் திட்டம் இதன்வசம் இருக்கவே செய்கிறது. எனவே, தொடர்ந்து லாபம் பார்க்கும் வாய்ப்பு இருக்கவே செய்கிறது எனலாம்.
ஏன் முதலீடு செய்யவேண்டும்?
இந்திய நகரங்களில் சுலபமாகத் தொழில், கல்வி, வேலைவாய்ப்பு கிடைக்கிற ஒரு நகரம் புனேயாகும். வேகமான வளர்ச்சிகொண்ட புனேயில் கணிசமான பங்களிப்பைக்கொண்டு மக்களின் மனதில் ஒரு ஸ்திரமான பிராண்டாக உருவெடுத்திருக்கிறது இந்த நிறுவனம்.  
தவிர, பெங்களூரிலும், மும்பை யிலும் சிறிய அளவிலான கட்டுமானப் பணியைச் செய்துவருகிறது. இதன் கையில் இருக்கும் நில வங்கியின் அளவும், தற்சமயம் இருக்கும் திட்டங்களும் தொடர்ந்து லாபத்தைத் தர வாய்ப்புள்ளதைப்போல் இருக்கிறது. 7 மில்லியன் சதுர அடி பரப்பளவை கட்டி விற்பனை செய்தும், ஏறக்குறைய 13 மில்லியன் சதுர அடி பரப்பளவுக்கான திட்டங்களை நடைமுறைப்படுத்தியும் வருகிறது. நிர்வாகத்தின் குணம் கட்டுமானத் தொழிலுக்கு மிகவும் ஏற்றாற்போலும், தரம் மிகுந்ததாகவும் இருக்கிறது. ஸ்திரமான லாபம், திட்டங்கள், நல்லதொரு லாப அளவு என எந்த அளவீட்டில் பார்த்தாலும் முதலீட்டுக்கு உகந்த நிறுவனமாகத் தெரிகிறது. இந்த நிறுவனத்தின் கடனின் அளவும் பெரிய அளவில் பயப்படும்படியாகத் தற்சமயத்தில் இல்லை எனலாம்.
நிர்வாகம் எப்படி?
1991-ல் ஆரம்பிக்கப்பட்டுச் சமீபகாலம் வரை 42 புராஜெக்ட்களை வெற்றிகரமாக முடித்துள்ளது இந்த நிறுவனம். இதில் 30 புராஜெக்ட்கள் ரெஸிடென்ஷியல் வகையைச் சேர்ந்ததாகவும், 8 வணிக வளாகங்களும், 4 ஐ.டி பார்க்குகளும் அடங்கும். இந்த நிறுவனத்தின் மேனேஜிங் டைரக்டர் ஒரு சிவில் இன்ஜினீயரிங் பட்டதாரி. ஏறக்குறைய 20 வருடங்களுக்கும் மேலான ரியல் எஸ்டேட் துறை அனுபவத்தைக் கொண்டவர். அதிக அளவிலான ரிஸ்க்குகள் எடுக்காமலும், ரியல் எஸ்டேட் துறைக்கே உண்டான பிரச்னைகள் பலவற்றையும் நன்கு அறிந்து செயல்படும் திறன் கொண்டவராகவும் இருப்பது சிறப்பு.
ரிஸ்க் ஏதும் உண்டா?
பெரும்பான்மையான புராஜெக்ட்கள் புனேயிலேயே இருப்பதால் எதிர்பாராதவிதமாகத் தொழில்ரீதியான தொய்வுகள் ஏதும் புனே நகரில் நடந்தால் இந்த நிறுவனத்தின் வியாபாரம் பெரிய அளவில் பாதிக்கப்படலாம். ரியல் எஸ்டேட் துறையில் கடுமையான போட்டியும் கட்டிமுடித்து விற்கப் படாத நிலையிலும், பாதிமுடிந்த நிலையிலும் பல புராஜெக்ட்கள் இருக்கின்றன. எனவே, விலை வீழ்ச்சி இந்த நிறுவனத்தின் லாபத்தைப் பாதிக்கும்.  
கட்டுமானத் துறைக்குத் தேவையான சிமென்ட், கம்பி, மணல், செங்கல் போன்றவை விலை ஏற்றமடைந்தாலும் லாபம் பாதிக்கப்படலாம். இது ஒரு சிறிய நிறுவனம்தான். எனவே, பெரும் மாறுதல்கள்கொண்ட ஒரு துறையில் எவ்வளவு தூரம் தொடர்ந்து தாக்குபிடிக்க முடியும் என்பது ஒரு கேள்விக்குறியே. ரிஸ்க்குகள் இருந்தபோதிலும், பழைய செயல்பாடுகளை மனதில்கொண்டு, மூன்று வருட கால அடிப்படையில் குறைந்த எண்ணிக்கையில் இந்த நிறுவனத்தின் பங்குகளை முதலீட்டாளர்கள் தங்கள் போர்ட்ஃபோலியோவில் சேர்த்துக் கொண்டால் தவறில்லை.
- நாணயம் ஸ்கேனர் 
(குறிப்பு: இந்தப் பகுதி இன்றைய விலையிலேயே வாங்கவேண்டிய பங்கு பரிந்துரை பகுதி அல்ல. இதில் சொல்லப்பட்டுள்ள பங்குகளை வாங்குவது முதலீட்டாளர்களின் தனிப்பட்ட முடிவாகும்!)