கம்பெனி ஸ்கேன் - தல்வால்காஸ் பெட்டா வேல்யூ ஃபிட்னஸ் லிட்!

உடல்நலத்துக்கு உறுதுணையாக இருக்கும் சர்வீஸை வழங்கும் ஒரு நிறுவனத்தைத்தான் இந்த வாரம் நாம் அலசப்போகிறோம். அதன் பெயர் தல்வால்கர்ஸ் பெட்டர் வேல்யூ ஃபிட்னஸ் லிமிடெட்.

தொழில் எப்படி?
உடற்பயிற்சி மற்றும் உடல் எடை குறைப்பு என்பது மிகப் பெரும் வியாபாரமாக இந்தியாவில் உருவெடுத்து வருகிறது. நம்முடைய உணவு, வேலை மற்றும் வாழ்க்கையில் ஏற்பட்ட பல மாறுதல்களே இந்த சர்வீஸ்களின் தேவையை வேகமாக வளர்த்து வருகிறது. இந்த சர்வீஸ்களின் தேவை எதிர்காலத்தில் அதிகரிக்குமே தவிர, குறைவதற்கு வாய்ப்பு இல்லை.  
மேலும், பொருளாதார ரீதியான வளர்ச்சியும் அதனால் ஏற்படும் வசதிவாய்ப்புகளால் உடலைப் பேணி காக்கவேண்டும் என்ற எண்ணத்தின் அதிகரிப்பும் இந்தத் துறைக்கு நல்லதொரு வளர்ச்சியைத் தரும் என்பதில் சந்தேகம் ஏதுமில்லை.
மொத்த உடற்பயிற்சி மற்றும் உடல் எடை குறைப்பு வியாபாரத்தின் சந்தை மதிப்பில், ஏறக்குறைய 50 சதவிகித  உடற்பயிற்சிக்கான சந்தை வாய்ப்பு என்கிறது ஆய்வுகள். உடற்பயிற்சி சேவைக்கான தேவை வருடாந்திர அளவில் 20% வளர்ந்து வருகிறது. மத்திய மற்றும் உயர்மத்திய தர வாழ்க்கைத்தரம் உள்ள மக்கள் தொகை அதிகரிப்பாலும், இந்திய மக்கள்தொகையில் இளைஞர்களின் சதவிகிதம் அதிகமாக இருப்பதும் உடற்பயிற்சி சேவையின் தேவை அதிகரிப்புக்கு நல்லதொரு வாய்ப்பாக இருக்கிறது.
கம்பெனி எப்படி?
1932-ல் விஷ்ணு தல்வால்கர்ஸ் என்பவர் முதல்முதலாக ஆரம்பித்த ஜிம்மே இந்த நிறுவனம் ஆரம்பிக்கப்பட்டதற்கான அடிப்படை. அதன்பின்னர் 1962-ல் அவருடைய மகன் மதுக்கர் தல்வால்கர் ஜிம் ஒன்றைத் துவங்கினார். அதன்பிறகு தல்வால்கர் பிராண்டை அயராது வளர்த்துவருகிறார்.  
2003-ல் தல்வால்கர்ஸ் பெட்டர் வேல்யூ ஃபிட்னஸ் லிமிடெட் நிறுவனம் ஆரம்பிக்கப்பட்டது. இந்தியா முழுவதிலுமாக 75 நகரங் களில் 145 கிளைகளுடனும் ஏறக்குறைய 1.5 லட்சம் உறுப்பினர்களுடனும் வெற்றிகரமாக ஜிம்களை நடத்தி வருகிறது இந்த  நிறுவனம்.
பெரியதொரு நெட்வொர்க் ஜிம்மை நடத்தி வெற்றிபெற்றதோடு நின்றுவிடாமல், புதிய முயற்சியாக எலெக்ட்ரோ மசில் ஸ்டிமுலேஷன் (நியூபார்ம்) முறையையும், இளைஞர்களைக் கவரும் அதிநவீன உத்தியாகிய ஃபிட்னஸ் வகுப்புக்குச் செல்லாமல் பார்ட்டிகளுக்குச் செல்வதைப்போல் சென்று ஃபிட்டாக இருப்பதற்கான சேவையையும் (ஜீம்பா ஃபிட்னஸ்) வழங்குவதன் மூலம் போட்டியாளர்களைத் தாண்டி வெகுதூரம் முன்னேறிச் சென்றுள்ளது இந்த நிறுவனம்.
போட்டி எப்படி?
ஏற்கெனவே சொன்னதைப்போல் பல்வேறு நூதன உத்திகளைக் கடைப்பிடிப்பதாலும், ஒரு கார்ப்பரேட் ஜிம்மாக இருப்பதால் பல்வேறு நிறுவனங்களிருந்து அவர்களுடையப் பணியாளர் களுக்கான சந்தாவைப் பெறுவதிலும் இந்த நிறுவனம் முன்னணி வகிக்கிறது.
எண்ணிக்கையில் பல கிளைகளைக் கொண்டிருப்பதால் பயிற்சிக்கான கருவிகளை வாங்குவதில் கணிசமான தொரு விலை தள்ளுபடியைப் பெற முடிகிறது இந்த நிறுவனத்தால். உள்ளூர் ஜிம்கள் மிகக் குறைந்த கட்டணத்தை வசூலித்துக் கடுமையான போட்டியைத் தரவும் வாய்ப்புள்ளது என்றாலும், தல்வால்கர்ஸ் ஒரு ஸ்ட்ராங்கான பிராண்டாக இருப்பதால், கொஞ்சம் அதிகமான கட்டணம் இருந்தால்கூட வாடிக்கையாளர்களைப் பெறுவதில் பெரிய இடைஞ்சல்கள் ஏதும் இதுவரையில் இல்லை.  
சொந்தமாகக் கிளைகளை நிறுவுவது மற்றும் பிரான்சைஸ் (ஹை-ஃபை மாடல்) மூலமாகக் கிளைகள் நிறுவுவது என்ற இரண்டு முறைகளிலும் செயல்பட்டு போட்டி நிறுவனங்களை வெற்றிகரமாகச் சமாளித்துவருகிறது இந்த நிறுவனம்.

மேனேஜ்மென்ட் எப்படி?
ஃபிட்னஸ் தொழில் நிறையச் செயல்பாட்டுச் சிக்கல்கள் மற்றும் போட்டிகள் இருக்கும் தொழில் என்றாலும், தல்வால்கர்ஸ் மேனேஜ்மென்டிடம் இருக்கும் நீண்டகால அனுபவமே இந்த நிறுவனத்தை ஒரு சிறப்பான நிறுவனமாகச் செயல்படவைக்கிறது.
கம்பெனியின் தலைவராகிய  மதுக்கர் தல்வால்கருக்கு இந்தத் துறையில் 50 வருட அனுபவமும்,  இந்த நிறுவனத்தின் நிர்வாக இயக்குநராகிய  பிரசாந்த் தல்வால்கருக்கு 25 வருட அனுபவமும் உண்டு.

ரிஸ்க் உண்டா?
இந்தத் தொழிலுக்கான தேவை கணிசமான அளவில் வளர்ந்து வருகிறது. எனவே, தேவைக் குறைபாடு ஏற்படலாம் என்பது குறித்த ரிஸ்க் குறைவு. அதேபோல் கணிசமான லாப விகிதத்தையும் கொண்டுள்ளது இந்த நிறுவனம்.50 சதவிகிதத்துக்கும் மேலான பங்குகளை புரமோட்டர்களே வைத்திருப்பதும், அந்தப் பங்குகளுக்கு ஈடாகக் கடன் ஏதும் இல்லை என்பதும் குறிப்பிடத்தக்க விஷயங்களாகும்.
வேகமான விரிவாக்கங்கள் செய்யப்படும்போது நிறைய பணம் தேவைப்படலாம். பல புதிய பிரீமியம் சர்வீஸ்களை அறிமுகப்படுத்தி வருகிறது இந்த நிறுவனம்.இந்த பிரீமியம் சர்வீஸ்கள் பெரிய அளவில் வாடிக்கையாளர்கள் மத்தியில் எடுபடாமல் போனால் லாபம் குறைய வாய்ப்புள்ளது.
இறுதியாக, இது ஒரு ஸ்மால் கேப் பங்கு. ஸ்மால் கேப்புக்கே உள்ள பல ரிஸ்க்குகள் இந்தப் பங்குக்கும் உண்டு என்பதை முதலீட்டாளர்கள் நினைவில்கொள்ள வேண்டும்.

  என்ன செய்யலாம்?
அளவான எக்ஸர்சைஸ் உடலுக்கு நல்லது என்பதுபோல், இந்த ஸ்மால் கேப் பங்கிலும் அளவாக முதலீடு செய்வது நல்லது. சந்தை வேகமான சரிவைச் சந்திக்கும்போது குறைந்த எண்ணிக்கையில் இந்தப் பங்கை வாங்கிப்போடலாம்.

- நாணயம் ஸ்கேனர்.
(குறிப்பு: இந்தப் பகுதி இன்றைய விலையிலேயே வாங்கவேண்டிய பங்கு பரிந்துரை பகுதி அல்ல. இதில் சொல்லப்பட்டுள்ள பங்குகளை வாங்குவது முதலீட்டாளர்களின் தனிப்பட்ட முடிவாகும்!)