கம்பெனி ஸ்கேன் - ஹிந்துஸ்தான் ஜிங்க்!

பொருளாதாரச் சக்கரம் மேல்நோக்கி போகும்போது நல்ல லாபத்தைப் பார்க்கும் வாய்ப்பு கிடைக்கும்.இந்த வாரம் கம்பெனி ஸ்கேனிங் பகுதியில் ஹிந்துஸ்தான் ஜிங்க் லிமிடெட் என்னும் கம்பெனியைப் பார்க்கப் போகிறோம்.

தொழில் எப்படி?
ஜிங்க் (துத்தநாகம்) எனும் நான்-ஃபெரஸ் மெட்டல் முலாம் பூசுவதற்குப் பயன்படும் ஓர் உலோகமாகும். முன்பெல்லாம் வீட்டிலிருக்கும் பாத்திரங்களுக்கு ஈயம்  (லெட்) பூசிப் பார்த்திருப்பீர்கள். தொழில்ரீதியான தொழிற்சாலைகளில் மெஷின்களில் பயன்படுத்தப்படும் இரும்பு துருப்பிடிக்காமல் இருக்க ஜிங்க் முலாம் பூசப்படுகிறது. தகடுகள், ட்யூப்கள், வயர்கள் எனப் பல்வேறு இரும்பு சம்பந்தப்பட்ட விஷயங்களுக்கும் இந்த முலாம் பூசப்பட்டே பயன்படுத்தப்படுகிறது.
உலகத்தில் தாதுக்களில் இருந்து பிரித்தெடுக்கப்படும் ஜிங்க் உலோகத்தில் கிட்டத்தட்ட 50%  அளவு இந்த முலாம் பூசுதலுக்கே பயன்படுத்தப்படுகிறது. கடந்த காலத்தில் வளர்ந்த நாடுகளில் பொருளாதார வளர்ச்சியின் தேவைக்கு ஏற்றாற்போல் புதிய நகரங்களும், துணை நகரங்களும் புதிதாக நிர்மாணிக்கப்படும்போது இந்தத் துத்தநாக முலாம் பூசப்பட்ட தகடுகளுக்கான தேவை மிக அதிகமாக இருந்துவந்தது. எதிர்காலத்தில் வளர்ந்த நாடுகளில் தேவை குறையுமென்றாலும் ப்ரிக் போன்ற வேகமாகப் பொருளாதார ரீதியாக வளர வாய்ப்பிருக்கும் நாடுகளில் இந்தத் தகடுகளின் தேவை அதிகரிக்கவே செய்யும். எனவே, ஜிங்க்-ன் தேவை தொடர்ந்து இருந்துகொண்டேதான் இருக்கும். 2012-க்கு முன்னால் வரை ஜிங்க் உற்பத்தித் தேவையைவிட சற்று அதிகமாகவே இருந்து வந்திருக்கிறது.
ஆனால், அதிகரித்துவரும் சுரங்கங் களின் ஆழம், முதலீட்டாளர்களின் அதிக லாப எதிர்பார்ப்பு, செலவினங்கள் அதிகரிப்பு போன்ற பல விஷயங்களால் உற்பத்தி சற்றே குறைந்து வருகிறது. உலகப் பொருளாதாரம் மீண்டும் சீராகும்போது ஜிங்குக்கு நல்ல விலை கிடைக்க வாய்ப்புள்ளது என்றே சொல்லலாம்.
பொதுவாகவே ஜிங்க்கின் தாதுக்களுடன்தான் மற்றொரு நான்-ஃபெரஸ் மெட்டலான  லெட்-ன் (காரியம்) தாதுப் பொருட்களும் கிடைக்கிறது. பேட்டரிகளில் லெட்-ன் உபயோகம் மிக மிக அதிகம். ஏறக்குறைய  உலகத்தில் தயாரிக்கப்படும் லெட்-ல் பாதி அளவு பேட்டரிகளிலேயே பயன்படுத்தப்படுகிறது. எனவே, லெட்டுக்கான தேவையும் தொடர்ந்து சீராக இருக்கும் என்று எதிர்பார்க்கலாம்.

கம்பெனி எப்படி?
ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனத்துக்கு ராம்பூரா அகுச்சா, ராஜ்பூரா தாரிபா, ஜாவர் மற்றும் சிந்தேசர் குர்ட் போன்ற இடங்களில் ஜிங்க் மற்றும் லெட் தாதுப்பொருட்களுக்கான சுரங்கங்கள் இருக்கின்றது. இதில் ராம்பூரா-அகுச்சாவில் இருக்கும் சுரங்கமே உலக அளவில் மிகப் பெரியதும், உலக அளவில் மிகக் குறைந்த செலவு உள்ளதும் ஆகும்.  மிகவும் உயரிய வகை தாதுப் பொருளை இந்தச் சுரங்கம் கொண்டுள்ளதுதான் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனத்துக்குப் பெரிய அனுகூலமாகும்.
2014-ம் ஆண்டிலும் ராம்பூரா- அகுச்சாவிலும், கயாட் சுரங்கத்திலும் புதிய சுரங்கங்கள் தாதுப்பொருளை வெளிக்கொணரத் துவங்கும். சுரங்கங்கள் அனைத்துமே கிட்டத்தட்ட 450 கி.மீட்டர் தூரத்தினுள்ளேயே இருப்பதால், உற்பத்திக்காக செய்யப்படும் தாதுப்பொருட்களின் போக்குவரத்து செலவும் குறைகிறது. தரமான தாதுப்பொருள் சுரங்கங்களைத் தன்னிடத்தே வைத்துக்கொண்டுள்ளதும் இந்த நிறுவனத்தின் தனிச் சிறப்பு.
ஹிந்துஸ்தான் ஜிங்க் தன்னுடைய உற்பத்திக்குத் தேவையான மொத்த மின்சாரத்தையும் தானே உற்பத்தி செய்யும் அளவுக்கு  தன்னிறைவு பெற்றுள்ளதால் இதிலும் செலவுக் குறைப்பைக் கடைப்பிடிக்கிறது. ஜிங்க்-ன் தாதுப்பொருளில் வெள்ளியும் இருக்கும்.  சிந்தேசர் குர்ட் சுரங்கத்தில் கிடைக்கும் ஜிங்க்-ன் தாதுப்பொருளில் அதிக அளவிலான வெள்ளி இருக்கிறது. வெள்ளியின் விலையும் கணிசமாக உயர்ந்துகொண்டு வருவதால், இதிலும் ஹிந்துஸ்தான் ஜிங்க் கணிசமான லாபம் பார்க்க முடியும் என்றே எதிர்பார்க்கலாம்.
சுரங்கம் சார்ந்த மேனுபேக்ஸரிங் தொழில்கள் அதிக அளவில் முதலீடு தேவைப்படும் தொழில்கள்.  கடைசியாக செய்யப்பட்ட விரிவாக்கங்களுக்குப் பின்னால்  எதிர்காலத்தில் (குறுகியகால அளவில்) வேறு பெரிய விரிவாக்கத் திட்டங்களை ஹிந்துஸ்தான் ஜிங்க் கொண்டிருக்கவில்லை. எனவே, பொருளாதார நிலை சீரடைந்து ஜிங்க், லெட் மற்றும் வெள்ளியின் தேவை அதிகரிக்கும்போது நல்ல லாபம் கிடைக்கும் வாய்ப்பு இந்த நிறுவனத்துக்கு உண்டு.

ரிஸ்க் ஏதும் உண்டா?
ஹிந்துஸ்தான் ஜிங்க் உற்பத்தி செய்யும் பொருட்களான ஜிங்க், லெட் மற்றும் வெள்ளியின் விலை என்பது லண்டன் சந்தையில் நிர்ணயிக்கப்படுகிறது. இந்தப் பொருட்களின் விலைகளில் ஏதாவது தாறுமாறான போக்கு வந்தால் லாபம் பாதிக்கப்படலாம்.  அதேபோல், ஏற்றுமதியும் பெருமளவில் இருப்பதால், டாலரின் சந்தை மதிப்பு மாற்றத்துக்கு ஏற்றாற்போல் லாபமும் மாற வாய்ப்புள்ளது.  
சுரங்கம் என்றாலே அது அரசாங்க மற்றும் சுற்றுச்சூழல் சட்டதிட்டங்கள் சம்பந்தப்பட்ட விஷயம். எனவே, அரசாங்கத்துக்கு தரவேண்டிய ராயல்டி மற்றும் கடைப்பிடிக்க வேண்டிய சட்டதிட்டங்கள் ஆட்சியாளர்களுக்கு ஏற்ப மாறவே செய்யும். சுரங்கத் தொழிலில் இருக்கும் நிறுவனங்கள் அவர்களுடைய லாபத்தில் கணிசமான தொகையைப் பாதிக்கப்பட்ட மக்களுடன் பகிர்ந்துகொள்ள வேண்டும் என்ற நிலைமையும் நடப்பில் வந்துவிடும்போது லாபம் பாதிக்க வாய்ப்பிருக்கிறது.

 மேனேஜ்மென்ட் எப்படி?
ஸ்டெர்லைட் இண்டஸ்ட்ரீஸ் ஏறக்குறைய 65 சதவிகிதமும், இந்திய அரசு ஏறக்குறைய 30 சதவிகிதமும், பொதுமக்கள் மீதமுள்ள 5 சதவிகிதத்தையும் இந்த நிறுவனத்தின் பங்குகளில் வைத்துள்ளனர். தற்போது அரசாங்கம் அதன் பங்குகளை விற்பதற்கு அட்டர்னி ஜெனரல் அனுமதியளித்துள்ளது இந்த பங்கின் விலை உயர்வதற்கான வாய்ப்பாகும். சுரங்கம் மற்றும் மேனுபேக்ஸரிங் துறையில் கணிசமான அளவு அனுபவமும் நிரூபிக்கப்பட்ட செயல்திறனும் கொண்ட அதிகாரிகள் இந்த நிறுவனத்தை மேலாண்மை செய்துவருகிறார்கள்.

ஏன் முதலீடு செய்யவேண்டும்?
உலகப் பொருளாதாரம் நலிவடைந்த நிலையில் இருக்கும்போது ஒரு மெட்டல் கம்பெனியில் முதலீடு செய்யலாமா என்ற கேள்வி அனைவரின் மனதிலும் தோன்றவே செய்யும். ஜிங்க் மற்றும் லெட் தயாரிப்பில் உலக அளவில் மூன்றாவது பெரிய நிறுவனமாக ஹிந்துஸ்தான் ஜிங்க் செயல்பட்டுவருகிறது. ஜிங்க் மற்றும் லெட் தயாரிப்பில் சல்ப்யூரிக் ஆசிட் மற்றும் சில்வர் என்பது உபபொருட்களாக வருகிறது. இவற்றின் தேவையும், ஜிங்க் மற்றும் லெட்டின் தேவையும் உலகப் பொருளாதாரத்தின் மந்தநிலை மாற ஆரம்பிக்கும்போது அதிகரிக்கவே செய்யும்.
பெரிய கடன் இல்லாமலும், விரிவாக்கத் திட்டங்கள் பல முடிவடைந்த நிலையிலும் இருக்கும் இந்த நிறுவனம் பொருளாதாரச் சக்கரம் மேல்நோக்கி போகும்போது நல்ல லாபத்தைப் பார்க்கும் வாய்ப்பு கிடைக்கும். எனவே, இந்த  நிறுவனத்தின் பங்குகளை ஃபாலோ செய்து, சந்தை நன்றாக இறங்கும்போது வாங்கி போர்ட்ஃபோலியோவில் சேர்ப்பது குறித்து முதலீட்டாளர்கள் பரிசீலனைச் செய்யலாம்.
 - நாணயம் ஸ்கேனர்.
(குறிப்பு: இந்தப் பகுதி இன்றைய விலையிலேயே வாங்கவேண்டிய பங்கு பரிந்துரை பகுதி அல்ல. இதில் சொல்லப்பட்டுள்ள பங்குகளை வாங்குவது முதலீட்டாளர்களின் தனிப்பட்ட முடிவாகும்!)