கம்பெனி ஸ்கேன் - எக்ஸைடு இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட்!

நாணயம் விகடன் இதழில் வெளியான கட்டுரை.... 
இந்த வாரம் நாம் ஸ்கேன் செய்யப்போகும் கம்பெனி ஆட்டோமொபைல் துறையில் பெரும் பங்களிப்பைக் கொண்டிருக்கும் எக்ஸைடு இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட். ஆட்டோமொபைல் துறையே தள்ளாடுகிறதே! இந்தச் சூழ்நிலையில் ஆட்டோமொபைலில் பயன்படுத்தப்படும் பேட்டரிகளை தயாரிக்கும் நிறுவனத்தில் முதலீடு செய்யலாமா என்று யோசிப்பதில் என்ன லாபம் என்று முதலீட்டாளர்கள் நினைக்கலாம்.
பொருளாதாரச் செயல்பாட்டில் சுணக்கம் வந்தபின்னர் எக்ஸைடு பேட்டரியின் விற்பனையும் லாபமும் நன்றாக குறைந்துகொண்டே வந்துள்ளது. இதையும் தவிர்த்துப் பொருளாதாரம் வேகமான ஓட்டத்தில் இருக்கும்போது எக்ஸைடு பேட்டரி போட்ட விரிவாக்கத் திட்டங்கள் எல்லாம் முடிவடைந்து, உற்பத்தி உபயோகத்துக்கு வரும்வேளையில் பொருளாதார வளர்ச்சி சுணக்கம் கண்டுவிட்டது. இதுவும் ஒருகுறையாகவே சந்தையில் பார்க்கப்பட்டு, அதற்குண்டான பலாபலன்கள் விலையில் தெரிய ஆரம்பித்துவிட்டது எனலாம். அதிலும் எக்ஸைடு பேட்டரி நிறுவனத்தின் விற்பனையில் பெரும்பங்களித்து வரும் ஆட்டோமொபைல் ஒரிஜினல் எக்யூப்மென்ட் மேனுபேக்ஸரிங் நிறுவனங்களுக்கான சப்ளையில் சரியானதொரு சுணக்கம் ஏற்பட்டு அதனுடைய பாதிப்பு லாபத்தில் கணிசமான அளவு தொடர்ந்து தெரிகிறது.
தொழில் எப்படி?
வேகமாக வளரும் பொருளாதாரத்தில் அதிவேகமாக வளரும் குணாதிசயத்தைக் கொண்டது ஆட்டோமொபைல் துறை. இந்தத் துறைக்கு உபகரணங்கள் சப்ளை செய்வது ஆட்டோ கம்ப்போனென்ட் துறை. தற்சமயம் வெகுவான சுணக்கம் இருக்கிறபோதும் நாடாளுமன்ற தேர்தலுக்குப் பின்னால் நிலைமை சரியாகும்பட்சத்தில் மீண்டும் ஒரு கணிசமான முன்னேற்றத்தை இந்தத் துறை காணும் வாய்ப்புள்ளது.
ஆட்டோமொபைல் துறையிலும் பேட்டரி தயாரிக்கும் நிறுவனமாக இருப்பதால், பொதுவான சுணக்கநிலை பொருளாதாரத்தில் ஏற்படும்போது மற்றத் தொழில்களுக்கு விற்கப்படும் பேட்டரிகளின் எண்ணிக்கையும்கூடக் கணிசமான அளவில் குறைந்துவிட்டது. இதுபோன்ற பொருளாதாரத்தின் சுழற்சியைச் சார்ந்த லாபம் கொண்ட தொழிலில், நிலைமை நன்றாக இருக்கும்போது கணிசமான லாபமும், நிலைமை மோசமாக இருக்கும்போது லாபக்குறைவும் ஏற்படுவது சகஜமே!  
அதேபோல், பொருளாதாரம் நன்றாக இருக்கும்போது ஏகப்பட்ட டிமாண்ட் உருவாவதால் மூலப்பொருட்களின் விலையும் தாறுமாறாக ஏறிவிடும். இதுபோன்ற மூலப்பொருட்களின் விலையேற்றம் பொருளாதாரம் நன்றாக இருக்கும்போது கொஞ்சம் லாபத்தைப் பதம் பார்த்துவிடும். அதேசமயம், தற்போது இருப்பதுபோன்ற பொருளாதார மந்தநிலையில் பேட்டரி தயாரிப்புக்குத் தேவையான முக்கிய மூலப்பொருட்களாகிய காரியம் விலை குறைவதால் அதனால் இந்தத் தொழில் பலன்பெற வாய்ப்புண்டு. இருப்பினும் பல பொருளாதார ஏற்றத்தாழ்வுகளில் காரீயத்தின் விலையும் தாறுமாறாக, முன்னுக்குப்பின் முரணாக ஏற்ற இறக்கத்தைச் சந்திப்பதால் இதையே இந்தத் தொழிலுக்கான ரிஸ்க் என்றுகூடச் சொல்லலாம்.
ஆட்டோமொபைல் பேட்டரி தவிர்த்து, மின்சாரத் தட்டுப்பாடு கடுமையாக நிலவும் காலத்தில் இன்வர்ட்டர் பேட்டரி வியாபாரம் நன்றாகப்போக வாய்ப்புள்ளது. இருப்பினும், தற்சமயம் மின் தட்டுப்பாடு சற்று குறைந்திருப்பதாலும், நீண்டகால அடிப்படையில் மின் தட்டுப்பாடு படிப்படியாகக் குறைய வாய்ப்பிருப்பதாலும் இந்தவகை பேட்டரி விற்பனை இந்தத் தொழிலில் பெரிய அளவில் லாபத்தில் பங்களிக்க வாய்ப்பில்லை எனலாம்.
  கம்பெனி எப்படி?
ஆட்டோமொபைல் பேட்டரி தொழிலில் மிகவும் பலமான சந்தைப் பங்களிப்புடன் இருக்கிறது இந்த நிறுவனம். ஏனென்றால், ஓஇஎம் பிரிவில் ஏறக்குறைய 65 சதவிகித சந்தைப் பங்களிப்பை இந்த நிறுவனம் கொண்டுள்ளது. ஆட்டோமொபைல் பேட்டரிகள் அதிகபட்சமாக மூன்று முதல் நான்கு வருட காலங்களே உழைக்கும். எனவே, தொடர்ந்து மாற்றிக்கொண்டே இருக்கவேண்டும். இந்தப் பழைய பேட்டரி மாற்றுவதற்காகச் செய்யப்படும் விற்பனையில் ஏறக்குறைய 35% சந்தைப் பங்களிப்பைக் கொண்டுள்ளது இந்த நிறுவனம்.
சில ஆண்டுகளாக ஆட்டோ மொபைல் துறையில் வீழ்ச்சி இருந்துவந்த போதும் பொருளாதாரத்தில் எதிர்பார்க்கும் திருப்பமும், அதிகரித்துவரும் சாலைக் கட்டுமானங்களும் வாகனங்களுக்கான தேவைகளை அதிகரிக்கவே செய்யும். இதனால் பேட்டரிகளின் தேவையும் அதிகரிக்கும். இந்தச் சூழலில் இந்த நிறுவனம் போன்ற கணிசமான சந்தைப் பங்களிப்பைக்கொண்ட நிறுவனங்கள் பலனடையவே செய்யும் எனலாம்.
பொருளாதாரச் சுணக்கம் நிலவும் சூழலிலும்கூட ஆட்டோமொபைல் நிறுவனங்கள் புதுப்புது மாடல்களைப் போட்டிபோட்டுக்கொண்டு அறிமுகப்படுத்தி விற்பனையை உயர்த்த பாடுபட்டு வருகின்றன. இந்தப் புதிய மாடல் அறிமுகங்களினாலும் இந்த நிறுவனம் பலனடையவே செய்யும். ஏற்கெனவே குறிப்பிட்டதைப்போல் பேட்டரிகளில் காரீயம் (லெட்) என்னும் உலோகமே பெரும்பங்கு பயன்படுத்தப்படுகிறது. இந்த உலோகத்தின் விலையோ உலகச் சந்தையில் நிர்ணயிக்கப்படுகிறது. பெரும்பாலான காரீயம் இறக்குமதி செய்யப்படுவதால் உலோகத்தின் விலை உயர்வையும், டாலரின் மதிப்பையும் கணக்கில்கொண்டே செயல்பட வேண்டியுள்ளது. இந்த இரு  விஷயங்களையும் மனதில்கொண்டு மறுசுழற்சி செய்த காரீயத்தைத் தனது பேட்டரிகளில் பயன்படுத்துவதற்கான முயற்சியில் இறங்கியுள்ளது இந்த நிறுவனம்.  இதற்குத் தேவையான ஸ்மெல்டர்ஸ்களையும் வாங்கிப் போட்டுள்ளது இந்த நிறுவனம்.
  நிர்வாகம் எப்படி?
பேட்டரி உற்பத்தி மற்றும் விற்பனையில் நல்லதொரு அனுபவமும், நேர்த்தியான கடன் இல்லாத பேலன்ஷீட்டையும் கொண்டிருக்கும் இந்த நிறுவனத்தின் நிர்வாகம் திறமை வாய்ந்தது என்றே சொல்லலாம். டிவிடெண்ட் கொடுப்பதிலாகட்டும், லாபம் ஈட்டுவதிலாகட்டும் இந்த நிறுவனத்தின் நிர்வாகத் திறமை சிறந்ததாகவே இன்றைய தினத்தில் தென்படுகிறது. இந்த நிறுவனத்தின் புரமோட்டர்கள்  ஷேரை அடகுவைத்து கடன் வாங்கவில்லை என்பது நல்ல விஷயமே!  
என்ன ரிஸ்க்?
பொருளாதார ஏற்றத்தாழ்வுகளின் பாதிப்பு முழுமையாக இந்த நிறுவனத்தின் லாபத்திலும் செயல்பாட்டிலும் இருக்கவே செய்யும். போட்டி என்பது பேட்டரி தொழிலில் மிகவும் கடுமையாக இருக்கிறது. சிறிய பல உள்ளூர் பிராண்டுகள் விலைகுறைவான பேட்டரிகளைத் தயாரித்து விற்பதன் மூலமும் வேகமாக வளர்ந்துவரும் அமரராஜா பேட்டரி போன்ற நிறுவனங்களும் இந்த நிறுவனத்துக்குத் தொடர்ந்து போட்டியைத் தந்துகொண்டிருக்கும். விற்பனையிலும் லாப அளவிலும் இதுவரை கணிசமான வளர்ச்சியைக் கொண்டிருக்கும் இந்த நிறுவனம் எதிர்காலத்தில் கடுமையான போட்டியை சந்திக்க நேரலாம்.
ஏன் முதலீடு செய்யவேண்டும்?
போட்டிகள் நிறைந்த பொருளாதாரத்தின் ஓட்டத்துக்கேற்ப வேகமாக மாறுகிற தொழில் இது. தற்போதைய சூழ்நிலையோ பொருளாதார மந்தநிலையின் உச்சத்தில் இருக்கிறது. கடந்த காலத்தின் நடப்புகளைவைத்துப் பார்க்கும்போது, மிகப் பெரிய சந்தைப் பங்களிப்பைக்கொண்ட நிறுவனமான இதன் பங்குகளை ஓர் அசாதாரண விலை இறக்கத்தின்போது வாங்கிப்போட்டால் பொருளாதாரம் மீண்டும் மேல்நோக்கிப் போக ஆரம்பிக்கும்போது கணிசமானதொரு லாபத்தை இந்தப் பங்குகள் தர வாய்ப்புள்ளது என்பதாலேயே இந்தப் பங்குகளின் மீது முதலீட்டாளர்கள் ஒரு கண்வைத்து செயல்படலாம்.
- நாணயம் ஸ்கேனர்
(குறிப்பு: இந்தப் பகுதி இன்றைய விலையிலேயே வாங்கவேண்டிய பங்கு பரிந்துரை பகுதி அல்ல. இதில் சொல்லப்பட்டுள்ள பங்குகளை வாங்குவது முதலீட்டாளர்களின் தனிப்பட்ட முடிவாகும்!)